சீனாவுக்கு எதிரான தாய்வானின் சுதந்திர போராட்டம் கடுமையான காலக்கட்டத்தை நோக்கி நகர்வதை காணக்கூடியதாக உள்ளது. தாய்வான் நிலப்பரப்பு மீதான சீனாவின் ஆக்கிரமிப்பும், சுதந்திர காற்றை நோக்கிய தாய்வானின் போராட்டமும் புவிசார் அரசியலுடன் வேரோடியுள்ளது.
தாய்வான், தென்கிழக்கு சீனாவின் கடற்கரையிலிருந்து சுமார் 100 மைல் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு தீவு நாடாகும்.
அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் முக்கிய அமெரிக்க நட்பு நாடுகள் வரிசையான ‘முதல் தீவு சங்கிலி’ என்றழைக்கப்படும் பட்டியலில் தாய்வான் முதலிடத்தில் உள்ளது.
சில வேளை சீனா தாய்வானை கைப்பற்றினால், மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் சீனா அதன் அதிகாரத்தைச் சுதந்திரமாகக் காட்ட முடியும். மறுப்புறம் குவாம் மற்றும் ஹவாய் வரையிலான அமெரிக்க இராணுவ தளங்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படும்.
எனவே தாய்வானின் உண்மையானதும் நியாயமானதுமான சுதந்திர போராட்டத்திற்குள் மறைந்து சீனாவை தடுக்க அமெரிக்கா முயல்கிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், சீனாவின் பிரதான நிலப்பகுதியில் தேசியவாத அரசாங்கத்தின் படைகளுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் மோதல் இடம்பெற்ற போது சீனா – தாய்வான் பிரிவு ஏற்பட்டது.
இந்த இருதரப்பு மோதலில் 1949 ஆம் ஆண்டில் சீன கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. அந்த கட்சியின் தலைவரான மாவோ சேதுங் பெய்ஜிங்கில் ஆட்சியைக் கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் பின்னர் தேசியவாதக் கட்சியினர் அனைவரும் தாய்வானுக்கு தப்பி ஓடினர். இதனை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் பின்னர் தாய்வான் வரலாற்றின் குறிப்பிடத்தக்க காலத்திற்கு ஆட்சி செய்து வரும் தேசியவாதக் கட்சியினர், தாய்வானின் மிக முக்கியமான அரசியல் கட்சிகளில் ஒன்றாக உருவெடுத்ததுள்ளனர்.
இன்றளவில் தாய்வானை இறையாண்மை கொண்ட நாடாக கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான வத்திக்கானும் மேலும 13 உலக நாடுகளும் அங்கீகரித்துள்ளன.
ஆனால் எந்தவொரு காரணத்தின் அடிப்படையிலும் தாய்வானை இறையாண்மை கொண்ட தனி நாடாக அங்கீகரிக்கக் கூடாது என்று சீனா கடுமையான அழுத்தங்களையும் எச்சரிக்கைகளையும் உலக நாடுகளுக்கு விடுத்து வருகிறது.
தாய்வான் மீதான சீனாவின் அதீத மேலாதிக்க போக்கு தற்போதய நெருக்கடியான மோதல் நிலைக்கு தள்ளியுள்ளது.
பொருளாதார உறவுகளை வலுப்படுத்துதல் போன்ற இராணுவமல்லாத வழிகளில் சீனா மீண்டும் தாய்வானுடன் ஒன்றிணைவதற்கான முயற்சிகளை எடுத்தாலும், இராணுவ மோதல் என்று வரும்போது, சீன இராணுவம் தாய்வானை எளிதில் தோற்கடித்துவிடும்.
அமெரிக்காவுக்கு அடுத்து மற்ற உலக நாடுகளைவிட அதிகளவில் சீனா பாதுகாப்புத் துறைக்காக நிதியை ஒதுக்குகின்றது.
கடற்படை ஏவுகணை தொழில்நுட்பம், விமானம் மற்றும் சைபர் தாக்குதல்கள் என்று பாதுகாப்பு துறையில் பெரியளவிலான ஆற்றலைப் பெறுவதற்காக, சீனா ஈடுப்பாடுடன் செலவிடுகிறது.
சீனாவுடைய இராணுவ சக்தியின் பெரும்பகுதி வேறு இடங்களில் கவனம் செலுத்துகின்ற அதே சமயம், ஒட்டுமொத்தமாக செயலிலுள்ள இராணுவத்தை பொறுத்தவரை, இரு தரப்புக்கும் இடையே ஒரு பெரிய அளவிலான ஏற்றத்தாழ்வு உள்ளது.
ஒரு வெளிப்படையான ஆயுத மோதலில், சீனத் தாக்குதலின் வேகத்தைக் குறைப்பது, சீன படைகள் தாய்வானில் கரையிறங்குவதைத் தடுக்க முயல்வது, வெளியிலிருந்து உதவி கிடைக்கும் வரை காத்திருக்கும் போது கொரில்லா தாக்குதல் போன்ற போர் உத்திகளை மேற்கொள்வது ஆகியவற்றை தாய்வானால் செய்ய முடியும்.
நெருக்கடியான நிலைமையில் தாய்வானுக்கு ஆயுதங்களை வழங்கும் அமெரிக்காவிடமிருந்து உதவிகளையும் கோரலாம். ஆனால் சீன தாக்குதலின் போது தாய்வானை எவ்வாறு பாதுகாக்கும் என்பது பற்றி அமெரிக்கா உத்திசார் கொள்கையில் தெளிவற்று நிலையிலேயே இன்றளவிலும் உள்ளது.
இதேவேளை, தாய்வானின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்கு இராணுவ விமானங்களை அனுப்பியதன் மூலம் சீனா அழுத்தத்தை அதிகரித்து வருகிறது.
இவ்வாறான சீனாவின் ஊடுருவல்களை 2020 ஆம் ஆண்டுக்கு பின்னரே வெளிப்படையாக உலகிற்கு எடுத்துரைக்கும் போக்கை தாய்வான் பின்பற்றுகின்றது. 2021 ஆம் ஆண்டில் தாய்வான் வான்பரப்பில் ஒரே நாளில் 56 ஊடுருவல்களை சீன இராணுவ விமானங்கள் முன்னெடுத்திருந்தன.
உலகின் பிற நாடுகளுக்கு தாய்வானின் சுதந்திரம், பொருளாதார காரணிகளின் அடிப்படையில் முக்கியமாகின்றது.
உலகின் அன்றாட மின்னணு உபகரணங்களான கையடக்க தொலைப்பேசிகள், மடிக்கணினிகள், கடிகாரங்கள், கணனி விளையாட்டு உபகரணங்கள் (கேம் கன்சோல்கள்) போன்ற பெரும்பாலான உபகரணங்கள் தாய்வானில் தயாரிக்கப்படுகின்ற கணினி சிப்களால் இயக்கப்படுகின்றன.
அண்மைய அறிக்கைகளின் பிரகாரம் தாய்வானின் குறைக்கடத்தி உற்பத்தி நிறுவனம் உலக சந்தையில் பாதியைத் தன்னகத்தே வைத்துள்ளது.
இவ்வாறானதொரு நிலையில் தாய்வானின் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பால், உலகின் மிக முக்கியமான தொழில்நுட்ப உற்பத்தி துறையை பெய்ஜிங் கட்டுப்பாடுத்தலாம்.
எனவே தான் உலக நாடுகள் பல தாய்வான் மீதான சீனாவின் அடக்குமுறைகளையும் ஆக்கிரமிப்பையும் எதிர்க்கின்றன. மறுப்புறம் சீனாவின் பிடிக்குள் செல்ல தாய்வானும் விரும்ப வில்லை. எனவே தற்காப்புக்காக தாய்வான் தனது இராணுவ பலத்தை அதிகரிக்கவும் நவீனமயப்படுத்தவும் நடவடிக்களை எடுத்து வருகின்றது.
இன்றைய நவீன போர்க்களத்தின் அதிசிறப்பு மிக்க ஆயுதங்களில் ஒன்றாக மாறியிருக்கும் ‘தற்கொலை ட்ரோன்கள்’ என்று அழைக்கப்படும் அமெரிக்கத் தயாரிப்பான ஆளில்லா விமான குண்டுகளை கொள்வனவு செய்ய தாய்வான் திட்டமிட்டுள்ளது.
தாய்வான் கடந்த மூன்று ஆண்டுகளாக சீன இராணுவ அத்துமீறல்களை கடுமையாக எதிர்கொள்கின்ற நிலையில், இத்தகைய முயற்சியில் இரங்கியுள்ளது.
சீன அச்சுறுத்தலில் இருந்து மீள்வதற்கு தற்கொலை ட்ரோன்களை கொண்டு தனது இராணுவத்தை பலப்படுத்த தாய்வான் முயற்சிக்கின்றது.
ரஷ்ய – உக்ரைன் போரில் உக்ரைன் தரப்பால் இத்தகைய ட்ரோன்கள் அதிகளவில் பயனபடுத்தியதை காணக்கூடியதாக இருந்தது. ‘தற்கொலை ட்ரோன்கள்’ ஒன்றின் உற்பத்தி விலை சுமார் 50 ஆயிரம் டொலர்கள் என்று கூறப்படுகின்றது.
அமெரிக்க தயாரிப்பான ‘தற்கொலை ட்ரோன்கள்’ மீது தாய்வானின் ஆர்வம் அதிகரித்துள்ளது. சீனப் படையெடுப்பைத் தடுக்க அல்லது தடுக்க உதவும் ஆயுதங்களை வாங்குவதில் கவனம் செலுத்த அமெரிக்க உந்துதலுடன் தாய்வான் செயல்பட தொடங்கியுள்ளமையின் வெளிப்பாடாகவே இந்த ‘தற்கொலை ட்ரோன்கள்’ கொள்வனவு திட்டமும் உள்ளது.
ஆனால், அமெரிக்க தயாரிப்பான ‘தற்கொலை ட்ரோன்கள்’ மீது தாய்வான் பாதுகாப்பு அதிகாரிகள் பெரிதும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
-சீனக் கப்பல்கள் தாய்வான் ஜலசந்தியைக் கடந்து வந்தால் அல்லது சீன இராணுவ டாங்கிகள் மற்றும் வாகனங்கள் கரைக்கு வந்தால், அவற்றைத் தகர்ப்பதில் ‘தற்கொலை ட்ரோன்கள்’ பயனுள்ளதாக இருக்கும் என்று தாய்வான அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். முதல் கொள்வனவாக AeroVironment ரக 300 ‘தற்கொலை ட்ரோன்களை’ வாங்கும் நோக்கத்தை தாய்வான் அமெரிக்க தரப்புக்கு அறிவித்துள்ளது.
மேலும் நான்கு மணிநேரம் இலக்கை நோக்கி செல்ல கூடிய Switchblade 600 மற்றும் Anduril’s Altius -600 ரக ‘தற்கொலை ட்ரோன்கள்’ குறித்தும் ஆர்வத்தை பென்டகனுக்கு தாய்வான் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.