பாலத்தீனர்களை காஸாவை விட்டு வெளியேற்ற 52 ஆண்டுக்கு முன்பே இஸ்ரேல் ரகசிய திட்டம்

0

காஸாவில் இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கும் பாலத்தீன மக்களின் நிலையை கருத்தில் கொள்ளும் போது, சினாய் குறித்த எகிப்தின் கவலை நியாயமானதா?

பிரிட்டிஷ் ஆவணத்தின் படி, இந்த கேள்விக்கு பதில் ‘ஆம், நியாயமானது’

ஆவணங்களை ஆய்வு செய்த போது, ஆயிரக்கணக்கான பாலத்தீனர்களை சினாய்க்கு வெளியேற்ற, 52 ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேல் ரகசிய திட்டம் தீட்டியிருந்தது தெரிகிறது.

இஸ்ரேல் ராணுவம் 1967-ல் மேற்கு கரை, கிழக்கு ஜெருசலேம் மற்றும் சிரியன் கோலன் ஹைட்ஸ் ஆகியவற்றுடன் சேர்த்து, காஸாவையும் கைப்பற்றிய பிறகு காஸா இஸ்ரேலுக்கு கவலைக்குரிய விஷயமாக மாறியது.

அகதிகளால் நிரம்பி வழிந்த முகாம்கள் இஸ்ரேல் எதிர்ப்புக்கான கூடாரங்களாக மாறின. இஸ்ரேல் ராணுவம் மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு எதிராக பிரச்சாரம் தொடங்கப்பட்டது.

காஸாவை இஸ்ரேல் ஆக்கிரமித்த போது, பிரிட்டிஷ் மதிப்பீடு படி, காஸாவின் குடிமக்கள் 15 லட்சம் பேரும், பாலத்தீனின் பிற பகுதிகளை சேர்ந்த, ஐ.நா உதவி பெறும், இரண்டு லட்சம் அகதிகளும் காஸாவில் இருந்தனர்.

கொரில்லா நடவடிக்கைகள் காரணமாக பாதுகாப்பு மற்றும் சமூக சிக்கல்கள் எழுந்தன என்றும் அகதிகள் முகாமில் வாழ்வது பொருளாதார ரீதியாக சாத்தியமில்லை என்றும் பிரிட்டிஷ் அறிக்கைகள் கூறுகின்றன. கொரில்லா தாக்குதல்கள் காரணமாக அந்த பகுதியில் உயிரிழப்புகள் அதிகரித்தன.


திட்டம் ஏன் ரகசியமாக காக்கப்பட்டது?

பிரிட்டிஷ் மதிப்பீடுகள் படி, 1968 முதல் 1971ம் ஆண்டு வரையிலான காலத்தில், காஸாவில், 240 அரேபிய கொரில்லா போராளிகள் கொல்லப்பட்டனர், மேலும் 878 பேர் காயமடைந்தனர். அதே போல், 43 பாலத்தீன வீரர்கள் கொல்லப்பட்டனர், 336 வீரர்கள் காயமடைந்தனர்.

அதன் பின்னரே, பாலத்தீன அகதிகளுக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என அரேபிய லீக் அறிவித்தது. காஸாவில் உள்ள எதிர்ப்பு இயக்கத்துக்கு ஆதரவு அளிக்க கூட்டு நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீனம், குறிப்பாக காஸாவின் நிலைமைகள் குறித்து பிரிட்டன் கவலைக் கொண்டது. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரிட்டன் அரசு, “அந்த பகுதியில் நடைபெறும் மாற்றங்களை பிரிட்டன் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது” என்று கூறியது.

ஆயிரக்கணக்கான பாலத்தீனர்களை எகிப்தின் சினாய் தீபகற்பத்துக்கு வடக்கில் , காஸா எல்லையிலிருந்து 54 கி.மீ தூரத்தில் உள்ள அல்-அரிஷில் குடியமர்த்தும் இஸ்ரேலின் திட்டம் குறித்து டெல் அவிவ்-ல் உள்ள பிரிட்டன் தூதரகம் உற்று நோக்கி வந்தது.

தூதரக அறிக்கைகள் படி, பாலத்தீனர்களை வலுக்கட்டாயமாக எகிப்து அல்லது பிற பகுதிகளுக்கு வெளியேற்றுவது தான் திட்டமாகும்.

இதனால் அந்தப் பகுதியில் இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிரான கொரில்லா நடவடிக்கைகளின் தாக்கத்தை குறைக்கவும், காஸாவில் உள்ள ஆக்கிரமிப்பு அதிகாரிகளின் பாதுகாப்புக்காகவும் இத்திட்டம் வகுக்கப்பட்டது.

1971ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே இஸ்ரேல் அரசு, பாலத்தீனர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி எகிப்தில் உள்ள அல் அரிஷ் போன்ற பகுதிகளில் குடியமர்த்தும் ரகசிய திட்டத்தை பிரிட்டன் அரசுடன் பகிர்ந்து கொண்டது.

இஸ்ரேலின் அப்போதைய போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு அமைச்சர், ஷிமோன் பெரெஸ் (இவர் பின்னாளில் இஸ்ரேலின் பிரதமரானார்), பிரிட்டன் தூதரகத்தில் உள்ள அரசியல் ஆலோசகரிடம், “காஸாவில் இஸ்ரேல் இன்னும் நிறைய செய்ய வேண்டியதற்கான காலம் வந்துவிட்டது” என்றார்.

இந்த சந்திப்பு குறித்த பிரிட்டன் தூதரக அறிக்கையில், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளின் விவகாரங்களுக்கு பொறுப்பான பெரெஸ், “இஸ்ரேல் அரசு அதிகாரபூர்வமாக புதிய கொள்கையை அறிவிக்காது, அல்லது எந்த புதிய பரிந்துரையும் செய்யாது.

நிலைமைகளை சீராய்ந்த பிறகு, காஸாவில் உள்ள பிரச்னைகளை தீர்க்க, இன்னும் பெரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளது” என்ற செய்தியை உறுதி செய்தார்.

 

‘வெளியேற்றத்தை மக்கள் விரும்புவார்கள்’ – இஸ்ரேல்

அந்த அறிக்கையின் படி, புதிய நடவடிக்கைகள் ஓராண்டுக்குள் நிலைமைகளை மாற்றும் என பெரெஸ் நம்பினார்.

இந்த திட்டத்தை வெளிப்படையாக அறிவித்தால், அது இஸ்ரேலின் எதிரிகளுக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமையும் என்று பெரெஸ் கூறினார்.

புதிய கொள்கை அமலாக்கத்தின் போது, காஸாவிலிருந்து நிறைய எண்ணிக்கையிலான மக்கள் வெளியேற்றப்படுவார்களா என கேட்டதற்கு, அகதிகள் முகாம்களில் இருப்பவர்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் மறுகுடியமர்த்தப்படுவார்கள் அல்லது வெளியேற்றப்படுவார்கள் என்று பெரெஸ் தெரிவித்தார்.

“காஸாவின் மக்கள் தொகையில் ஒரு லட்சம் பேரை வெளியேற்றுவது சாத்தியம்” என்று இஸ்ரேலின் தீர்க்கமான முடிவை வெளிப்படுத்தினார்.

மேற்கு கரையில் 10 ஆயிரம் குடும்பங்கள், இஸ்ரேலில் சில ஆயிரம் குடும்பங்கள் மறுகுடியமர்வு செய்யப்படலாம் என தெரிவித்த பெரெஸ், “மேற்கு கரை அல்லது இஸ்ரேல் பகுதிகளுக்கு மறு குடியமர்வு செய்வதற்கு மிகுந்த செலவாகும்” என்று பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் கூறினார்.

“சொல்ல போனால் மக்கள் பலருக்கு, தங்கள் குறுகிய வாழ்விடங்களுக்கு பதிலாக அல்-அரிஷில் தரமான எகிப்தின் கட்டுமானத்தில் உருவாக்கப்பட்ட நல்ல வீடுகள் கிடைப்பதில் திருப்தியே” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

“அப்படி என்றால், அல் அரிஷை காஸாவின் நீட்சியாக கருத வேண்டுமா” என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் கேட்டதற்கு, “இது முழுக்க முழுக்க நடைமுறை காரணங்களுக்காக காலியாக உள்ள வீடுகளை பயன்படுத்தலாம் என்று எடுக்கப்பட்ட முடிவாகும்” என்று பெரெஸ் கூறினார்.

 

கவர்ச்சிகரமான உள்ளூர் மறுவாழ்வு திட்டம்

காஸா பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண, தற்போது உள்ள எல்லை தாண்டி குடியமர்த்தல் நடைபெற வேண்டும் என இஸ்ரேலியர்கள் நம்புவதாக, இஸ்ரேலுக்கான பிரிட்டன் தூதர் எர்னஸ்ட் ஜான் வார்ட் பார்னஸிடம் பெரெஸ் தெரிவித்தார்.

“இதனால் இஸ்ரேல் அரசு விமர்சனங்களை எதிர்கொள்ளலாம். ஆனால் இஸ்ரேலுக்கு இதன் முடிவு தான் மிகவும் முக்கியம்” என்று பெரெஸ் கூறினார்.

பிரிட்டனின் மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான தலைவர் எம் இ பைக், இது குறித்த அறிக்கையில், “அகதிகள் முகாம்களின் அளவை குறைக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் அகதிகள் வலுக்கட்டாயமாக எகிப்தில் உள்ள அல்-அரிஷுக்கு குடியேற வேண்டியிருக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஒரு மாதம் கழித்து, காஸாவிலிருந்து பாலத்தீனர்களை வெளியேற்றும் திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ கூட்டத்தில் பல நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இஸ்ரேல் தனது திட்டம் குறித்த தகவல்களை தெரிவித்தது.

பிரிகேடியர் ஜெனரல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளின் விவகாரங்களின் ஒருங்கிணைப்பாளர் ஷ்லோமோ கசித், “மாற்று வீடுகள் கிடைக்கும் வரை, காஸாவில் உள்ள பாலத்தீனர்களின் வீடுகளை ராணுவம் இடிக்காது” என்று தெரிவித்தார். இஸ்ரேல் ராணுவ அரசு ஏற்றுக் கொண்ட ஒரே நிபந்தனை இது தான்.

பிரிட்டிஷ் தூதரக அறிக்கையின் படி, மறு குடியமர்வுக்கு ஏன் வடக்கு சினாய் தேர்ந்தெடுக்கப்பட்டது என்று கேட்டதற்கு, “அல்-அரிஷில் தான் காலி வீடுகள் இருந்தன, அங்கு புதிய கட்டுமானங்கள் தொடங்காது, ஏனென்றால் அங்குள்ள வீடுகள் எகிப்து அதிகாரிகளுக்கு சொந்தமானவை ஆகும்” என்று பிரிகேடியர் கூறினார்.

பிரிட்டனின் பார்வையிலிருந்து பார்க்கும் போது இது, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் மோஷே தயான் 1967-ல் அறிவித்த ட்ரையாட் கொள்கைக்கு முரணானதாகும்.

அந்த கொள்கையின் படி, போருக்கு பிறகு, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளின் அதிகாரம் உறுதி செய்யப்படும், மக்களின் அன்றாட வாழ்வில் மிக குறைந்த தலையீடும், இஸ்ரேல் மற்றும் உலகின் பிற பகுதிகளுடனான உறவு உறுதிப்படுத்தப்படும் என கூறியிருந்தார்.

இஸ்ரேலுக்கான பிரிட்டிஷ் தூதர் பார்னஸ், “அகதிகள் முகாம்கள் கொரில்லா நடவடிக்கைகளுக்கு உகந்த சூழலை வழங்குகிறது. இதனால் வெளிப்படையான உறவுக்கான கொள்கை சிக்கலாகிறது” என்றார்.

பாலத்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனம், “இந்த வெளியேற்றத்துக்கான தீர்வை இஸ்ரேல் வழங்கும் என நம்புகிறது” என்று பார்னஸ் தெரிவித்திருந்தார்.

“இஸ்ரேலின் பாதுகாப்பு குறித்த கவலைகள் புரிகிறது, ஆனால் வலுக்கட்டாயமாக அகதிகளை வெளியேற்றுவது ஏற்றுக் கொள்ள முடியாது” என ஐ.நா நினைப்பதாக பார்னஸ் தெரிவித்தார்.

இஸ்ரேலின் ரகசிய திட்டம் குறித்த தனது அறிக்கையில், “இஸ்ரேலின் இந்த திட்டம் எவ்வளவு நியாயமானதாக இருந்தாலும், இஸ்ரேல்,இதன் விளைவுகளை குறைத்து மதிப்பிடுகிறது என்பதை உணர வேண்டும். அரபு உலகம், ஐ.நா, பிற நாடுகள் இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பிறகு, பல விதமான தீர்வுகளை முன்வைப்பார்கள்” என்று கூறியிருந்தார்.

எனினும் இஸ்ரேல் தனது திட்டத்தை கைவிடவில்லை.

1971ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரிட்டிஷ் தூதரகம் அனுப்பிய அறிக்கையில், “முகாம்களை காலி செய்யும் பணி தொடர்கிறது. ஆனால் அவர்கள் மெதுவாக செயல்படுகிறார்கள்.

ஏனென்றால் அல்-அரிஷில் வீடுகள் கிடைக்கவில்லை” என்று குறிப்பிட்டிருந்தது. நுசிரத் முகாமிலிருந்து அல்-அரிஷுக்கு பாலத்தீன அகதிகள் ஏற்கெனவே மறுகுடியமர்வு செய்யப்பட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

டிசம்பர் மாத இறுதியில், காஸாவிலிருந்து வெளியேற்றப்பட்ட பாலத்தீனர்கள் குறித்த தகவல்களை பிரிட்டன் இஸ்ரேலிடமிருந்து கேட்டது.

“இஸ்ரேலால் வெளியேற்றப்பட்ட காஸா அகதிகள்” என்ற தலைப்பிலான அறிக்கையில், “1,638 குடும்பங்கள்,(11,512 பேர்) தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்” என்று இஸ்ரேல் தெரிவித்தது.

காஸா பிரச்னைக்கான தீர்வாக பிரிட்டன் சில ஆலோசனைகளை முன்வைத்தது. காஸா ஜோர்டான் நாட்டின் ஒரு பகுதியாக இணைந்துகொள்வது, அல்லது மத்திய கிழக்கு பொது சந்தையின் பகுதியாக காஸா இருப்பது.

கூட்டு தண்டனை மற்றும் தீவிரவாதம்

அதே நேரம் இஸ்ரேல் நான்காம் ஜெனிவா மாநாட்டின் தீர்மானங்களை எந்த அளவுக்கு பின்பற்றுகிறது என்ற விவாதத்தையும் பிரிட்டன் எழுப்பியது. நான்காம் ஜெனிவா மாநாடு, ஆக்கிரமிப்பு செய்யும் சக்திகளின் பொறுப்புகளை பட்டியலிட்டது.

ஜெனிவா மாநாட்டின் 37வது சரத்தின் படி, வலுக்கட்டாய மறுகுடியமர்வு, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு வலுக்கட்டாயமாக வெளியேற்றம் செய்வது தடை செய்யப்பட்டதாகும்.

காஸாவில் அல்லாமல் சினாயில் அகதிகளை மறுகுடியமர்வு செய்வதன் மூலம் அரசியல் எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டும் என வெளிநாட்டு சட்ட ஆலோசகர் தெரிவித்திருந்தார்.

மக்களை பாதுகாப்பதற்காக தான் அவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள் என்று இஸ்ரேல் வலியுறுத்தினால், இந்த மறுகுடியமர்வை சட்ட ரீதியாக எதிர்ப்பது சவாலாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

எனினும் , “நான்காம் ஜெனிவா மாநாட்டின் தீர்மானங்களின் படி இஸ்ரேலின் திட்டம் நியாயமானது அல்ல.

அகதிகளின் வீடுகளை இஸ்ரேல் இடிக்கும் போது, அவர்களை மீண்டும் இஸ்ரேல் வீட்டுக்கு அனுப்பும் என்ற வாதத்தை யாரும் நம்ப மாட்டார்கள். பாலத்தீன மக்களை காஸாவிலிருந்து வெளியேற்றும் திட்டம் கூட்டு தண்டனையாக பார்க்கப்படும்” என்றார்.

“ஒரு நபர் தனிப்பட்ட முறையில் செய்யாத குற்றத்துக்கு தண்டிக்கப்பட முடியாது. சர்வதேச உடன்படிக்கையின் 33வது சரத்தின் படி, கூட்டு தண்டனை, தீவிரவாதம், அச்சுறுத்தல் அனைத்தும் தடை செய்யப்பட்டது” என்று வலியுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.