பசிபிக் தீவுகளில் 10 வருடங்களுக்கு மேலாக வசிக்கும் பிரெஞ்சு குடியிருப்பாளர்களை தேர்தல்களின் போது வாக்களிப்பதற்கு அனுமதிக்கும் வகையில் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் வாக்களிக்கப்பட்டதை அடுத்து, நியூ கலிடோனியாவில் வெகுஜன எதிர்ப்பு கிளம்பியது.
அரசியலமைப்பு சீர்திருத்தம் தீவுநாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதாக பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்த போதிலும், உள்நாட்டு மக்கள் தொகையில் 40 வீதமாக காணப்படும் பழங்குடி கனாக்கு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நடவடிக்கை, பிரான்ஸில் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என அஞ்சுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, நியூ கலிடோனியாவில் வெகுஜன எதிர்ப்பு நடவடிக்கை வன்முறையாக மாறிய நிலையில், பெருமளவான சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, சுமார் 150 வர்த்தக நிலையங்கள் சூரையாடப்பட்டு எரிக்கப்பட்டுள்ளதுடன், வாகனங்களும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வன்முறை காரணமாக நியூ கலிடோனியாவில் இதுவரை சுமார் 200 மில்லியன் யூரோ சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், கடந்த 16 ஆம் திகதி முதல் அங்கு ஊரடங்கு உத்தரவு மற்றும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வன்முறையில் இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ள நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், டிக்டொக் சமூக ஊடகத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பிரதான வீதிகள் மற்றும் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நிமித்தம் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நியூ கலிடோனியாவில் சிக்கித் தவிக்கும் தமது நாட்டு குடிமக்களை வெளியேற்றுவதற்கு விமானங்களை அனுமதிக்குமாறு அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இருப்பினும், குறித்த கோரிக்கையினை ஏற்று நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே குவாடலூப், மார்டினிக், ரீயூனியன் தீவு மற்றும் பிரெஞ்சு கயானா ஆகிய பகுதிகளின் தலைமைகள் நெருக்கடி அரசியல் தீர்வுகாண அழைப்பு விடுத்துள்ளன.
இதனிடையே, CCAT எனப்படும் சுதந்திர ஆதரவுக் குழு இந்த போராட்டங்களின் பின்னணியில் இருப்பதாக பிரான்ஸ் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், வன்முறைக்கு வழிவகுத்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் பத்து பேர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.