மகிந்தவின் ஆட்சியில் இடம்பெற்ற ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூட்டு வழக்கின் தீர்ப்பு: மேன்முறையீடு கோரும் இளம் ஊடகவியலாளர்கள் சங்கம்

0

சுத்தமான குடிநீர் கோரி கம்பஹா மாவட்டத்தில் உள்ள வெலிவேரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிராயுதபாணியான அமைதிப் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பான ரத்துபஸ்வல வழக்கின் தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்யுமாறு இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் இன்று (20) சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

2013 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் இச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. கோட்டாபய ராஜபக்ச அப்போது பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்திருந்தார்.

இந் நிலையில் இந்த வழக்குத் தீர்ப்புக்கு எதிராக இளம் ஊடகவியலாளர் சங்கம் மேன்முறையீடு செய்திருக்கின்றது.

கொழும்பு குற்றப்பிரிவு சாட்சியங்களை மறைத்து மேற்கொண்ட விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு ஒப்படைக்குமாறு கோரி முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோனிடம் இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் முறைப்பாடு செய்ததாகவும், அதன் பின்னர் பல உண்மைகள் வெளியாகியுள்ளதாகவும் இளம் ஊடகவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

வெளிவந்த ஆதாரங்கள்

மிக அமைதியான முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்த ஆர்ப்பாட்டத்தின் தேசப்பிரிய குணவர்தன தலைமையிலான இராணுவக் குழுவினர் அருகில் வந்து அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு கூறியமை, கலைந்து செல்ல ஒரு சில நிமிடங்களை கோரியிருந்த போதும் பிரிகேடியரின் உத்தரவின் பேரில் தாக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியமை, சுமார் 3 மணி நேரம் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியமை, தேவாலயத்திற்குள் புகுந்து மதகுருமார்கள் உள்ளிட்டோர் மீது தாக்குதல் நடத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியமை தொடர்பான பல ஆதாரங்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையில் கிடைத்துள்ளதாக சங்கம் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீண்ட நேரம் துப்பாக்கிச் சூடு நடத்தும் போது பிரிகேடியர் தேசப்பிரிய எந்தவிதமான தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என நீதிமன்றமும் பதிவு செய்துள்ளதாகவும் இளம் ஊடகவியலாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு நீதி வழங்குமாறு ட்ரயல் அட்-பார் (trail-at-bar) வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறு இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் மூலம் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்ட கடிதம் கீழே உள்ளது.

ரத்துபஸ்வலவின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு கோருதல்

கம்பஹா ரத்துபஸ்வல நீர்ப் பிரச்சினை தொடர்பாக வெலிவேரிய மற்றும் பலூம்ஹர பிரதேசங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மூவர் கொல்லப்பட்டது மற்றும் மேலும் சிலரை தாக்கி காயப்படுத்திய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் அருண தேசப்பிரிய குணவர்தன உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ரத்துபஸ்வல சம்பவமானது, வடக்கில் உள்நாட்டுப் போருக்குப் பின்னர் அமைதியான முறையில் நடத்தப்பட்ட போராட்டத்தின் மீது இராணுவத்தினர் நடத்திய மிகக் கொடூரமான தாக்குதல் ஆகும்.

நீதி கோரும் இளம் ஊடகவியலாளர்கள் சங்கம்

2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் தற்போது வரை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் குறித்த சம்பவத்துக்கு நீதி கிடைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இது தொடர்பிலான விசாரணைகளை கொழும்பு குற்றப் பிரிவினர் சாட்சியங்களை மறைத்து மேற்கொண்டு வந்தமையால் , விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு கோரி 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 06ஆம் திகதியன்று CIB ii 332/19 என்ற இலக்கத்தின் கீழ் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்தோம்.

அதன் பின்னர், விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், அந்த விசாரணையின் போது பெருமளவானவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

சாட்சியங்கள்

இறுதியாக, ட்ரயல் அட்-பார் (trail-at-bar) உயர் நீதிமன்றத்திற்கு ஒதுக்கப்பட்ட வழக்கில் 205 சாட்சிகள் பெயரிடப்பட்டனர்.

மிக அமைதியான முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்த ஆர்ப்பாட்டத்தின் தேசப்பிரிய குணவர்தன தலைமையிலான இராணுவக் குழுவினர் அருகில் வந்து அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு கூறியமை, கலைந்து செல்ல ஒரு சில நிமிடங்களை கோரியிருந்த போதும் பிரிகேடியரின் உத்தரவின் பேரில் தாக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியமை, சுமார் 3 மணி நேரம் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியமை, தேவாலயத்திற்குள் புகுந்து மதகுருமார்கள் உள்ளிட்டோர் மீது தாக்குதல் நடத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியமை தொடர்பான பல ஆதாரங்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையில் கிடைத்துள்ளதாக சங்கம் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், நீண்ட நேரம் துப்பாக்கிச் சூடு நடத்தும் போது பிரிகேடியர் தேசப்பிரிய எந்தவிதமான தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் இராணுவத்தின் ஆரம்ப விசாரணை நீதிமன்றமும் பதிவு செய்திருந்தது.

மேன்முறையீடு செய்யுமாறு கோரிக்கை

இவ்வாறானதொரு சூழ்நிலையில், அமைதிப் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தி, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள், அதற்கு ஆதரவளித்தவர்கள் சட்டத்தில் இருந்து தப்பிப்பது என்பது பாரதூரமான நிலையாகும்.

மேலும் , இது இலங்கையில் நீதிச் செயன்முறையில் பாதிக்கப்பட்டவர்களையும் ஒட்டுமொத்த குடிமக்களையும் சிக்கலுக்குள்ளாக்குகிறது.

எனவே, ரத்துபஸ்வல சம்பவம் தொடர்பில் கடந்த 17ஆம் திகதி கம்பஹா ட்ரயல் அட்-பார் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யுமாறு பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் என்ற வகையில் கேட்டுக் கொள்கிறோம்.‘ என குறிப்பிடப்பட்டிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.