இந்தியாவின் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் விரட்டி விரட்டி குத்திக் கொன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள பாலாபபூர் பகுதியில் உள்ள ராயல் காலனியில் நேற்று [ஜூன் 13] இரவு நடந்த இந்த கொடூர சம்பவத்தில் சையத் சமீர் என்ற அந்த 28 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பாபேட் பகுதியைச் சேர்ந்த அலங்காரத் தொழிலாளர் சையத் நேற்று இரவு வேலை முடித்து வீடு திரும்பும்போது மர்ம நபர்கள் அவரை கொலை வெறியுடன் துரத்தியுள்ளனர். சுற்றிலும் அடுக்குமாடி கட்டிடங்கள் நிறைந்த ராயல் காலனி பகுதியில் சையதை துரத்திப் பிடித்த அவர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
அவர்களில் ஒருவர் தனது கையில் வைத்திருந்த கத்தியால் சையதை குத்தினார். சையத் சரிந்து கீழே விழுந்த நிலையிலும் அவரை கண்மூடிதனமாக அவர்கள் உதைத்ததை அப்பகுதியில் இருந்தவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
சையத்தை அவர்கள் தாக்கியபோது அருகே பலர் நடந்து சென்று கொண்டிருந்தும் யாரும் உதவிக்கு வரவில்லை. பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் மிதந்த சையத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த கொலை தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ள பொலிஸார் மர்ம நபர்களை வீடியோ காட்சிகளின் உதவியுடன் தீவிரமாக தேடிவருகின்றனர்.