பெருந்தோட்ட நிறுவனங்கள் வேறு முதலீட்டாளர்களுக்கு – சியம்பலாபிட்டிய

0

எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்துக்கு அப்பால், மேலும் சில பெருந்தோட்ட நிறுவனங்களும் ஆயிரத்து 700 ரூபா அடிப்படைச் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க இணக்கம் தெரிவித்திருக்கின்றன. அவ்வாறு இருக்கையில், இந்த சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்க முடியாது என்று நிறுவனங்கள் அவர்களுக்கு இருக்கும் உள்ளக மற்றும் வெளிப்புற நெருக்கடிகள் தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாட வேண்டும். அவ்வாறு வழங்க முடியாத பட்சத்தில் வேறு முதலீட்டாளர்களிடம் பெருந்தோட்ட நிறுவனங்களை ஒப்படைக்கவும் அரசாங்கம் தயாராக இருக்கிறது – என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

எல்கடுவ நிறுவனம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஆயிரத்து 700 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்க ஆரம்பித்துள்ளது. அதுவே முன்னுதாரணமாகும். மேலும் சில பெருந்தோட்ட நிறுவனங்களும் ஆயிரத்து 700 ரூபா அடிப்படை சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முடியும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன.

 

அதேபோன்று, ஏதாவதொரு நிறுவனத்துக்கு இந்த சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முடியவில்லை என்றால் அதற்கும் அரசாங்கத்திடம் வேலைத்திட்டம் இருக்கிறது. அவ்வாறு செலுத்த முடியாத நிலைமையில் இருக்கும் நிறுவனங்கள் அரசாங்கத்துடன் கலந்துரையாடலுக்கு வரவேண்டும். அதற்கு அரசாங்கம் தயாராகவும் இருக்கிறது. அமைச்சரவை அனுமதியும் இருக்கிறது. நிதி அமைச்சின் தலைமைத்துவத்தில் ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த 20 வருட நிர்வாகத்தில அவர்களின் உள்ளக நெருக்கடிகளினால் இந்த அதிகரிப்பை வழங்க முடியவில்லை என்றால், எதிர்காலத்தில் முதலீட்டாளர்களை மாற்றியாவது அந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல தயாராகவே இருக்கிறோம்.

அவர்களால் நிர்வகிக்க முடியாத விடயம் இருக்குமாக இருந்தால் அதுதொடர்பில் கவனம் செலுத்தவும் தயாராக இருக்கிறோம்.

தற்போது அதற்கான முதல் கட்டத்தை ஆரம்பித்துவிட்டோம். பகுப்பாய்வுகளை ஓரத்தில் வைத்துவிட்டு இந்த தோட்டங்களுக்கு குறைந்த வாழ்வாதாரம் கொண்ட பணியாளரே அவசியமாக இருக்கிறது. 2030 வயதுக்கிடையில் 04 சதவீத இளையோர் உழைப்பு வைத்துக்கொண்டு, நீண்ட காலத்துக்கு ஒரு தோட்டத்தாலோ நிறுவனத்தாலோ நிலைத்திருக்க முடியாது. அதுவே முதலாவது பிரச்சினை. இதுவே முதலீட்டின் முதலாவது காரணியுமாகும். இரண்டாவது, பிரச்சினை தம்மிடம் இருக்கும் பணியாளர்களின் 80 சதவீதமானவர்கள் அரசாங்கத்துடன் இணைப்பை ஏற்படுத்தி நீண்ட காலத்துக்கு செல்லும் தன்மை நிறுவனமொன்றுக்கு இருக்கிறதா என்பது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

பெருந்தோட்டங்களில் நீண்ட நிலைப்புக்காக மாத்திரமே இந்த சம்பள அதிகரிப்பை மேற்கொண்டோம். இவ்விரு வருடங்களில் நாங்கள் எடுத்த தீர்மானங்களுடன் ஒப்பிட்டு பார்த்து பெருந்தோட்டங்களுக்கான சம்பள அதிகரிப்பை பகுப்பாய்வு செய்து இது தேர்தலை இலக்காக வைத்து எடுக்கப்பட்ட தீர்மானமா என்பதை கணிக்க வேண்டும்.

பெருந்தோட்ட நிறுவனங்கள் சிறந்த முகாமைத்துவத்தை செய்யுமாக இருந்தால் சம்பளத்தை செலுத்துவதில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. 1971ஆம் ஆண்டு காணி மறுசீரமைப்புடன் பெருந்தோட்ட நிறுவனங்கள் அவசியமற்ற அரசியல் தலையீடுகளுக்கு உள்ளானது. அதன் காரணமாக 1992ஆம் ஆண்டு தனியார் நிறுவனங்களின் முகாமைத்துவத்துக்கு வழங்கவேண்டி ஏற்பட்டது. எப்படியாவது ஒருவருக்கு ஒப்படைக்க வேண்டும் என்ற நிலைமையே அன்று இருந்தது. அந்த குறைபாடுகளுக்கே இன்று பதில் தேடிக்கொண்டிருக்கிறோம் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.