இலங்கையை பொறுத்தவரையில் தமிழ் மொழி கையாளுகையானது மிகவும் மோசமாக இருந்துவந்த நிலை தற்போது மாறிவிட்டாலும் சில பொது போக்குவரத்துகளிலும் பொது இடங்களிலும் தமிழ் மொழி கையாளுகை மிகவும் மோசமாக இருப்பதை காணக்கூடியதாக இருக்கும்.
இவ்வாறான விடயங்கள் சமூக ஊடகங்களில் அவ்வப்போது ட்ரெண்டாகி பின் தானாகவே அவை காணாமல் போய்விடும். ஆனால், அது தொடர்பில் எவ்வித மாற்றமோ திருத்தமோ ஏற்பட்டிருக்குமா என தேடி பார்த்தால் பத்தில் இரண்டு இடத்தில் மட்டுமே மாற்றம் நிகழ்ந்திருக்கும்.
ஆனால், இலங்கை அரசாங்கம் சார்பாக இடம்பெறும் ஒரு மாபெரும் நிகழ்வில் இவ்வாறு நடந்திருப்பது தற்போது வேடிக்கையாக இருக்கின்றது.
நுவரெலியா – சினிசிட்டா நகர மண்டபத்தில் ஜனாதிபதியின் புலமைப்பரிசில் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது.
இதன்போது, மேடையில் காட்சிப்படுத்தப்பட்ட பின்புற காணொளி அமைப்பில் ஜனாதிபதி என்பதற்கு பதிலாக ஐனாதிபதி என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த ஒருங்கிணைப்பு குழுவில் அங்கம் வகித்த ஒரு அரச அதிகாரியிடம் வினவியபொழுது, அவர் கூறிய பதிலானது சிங்களத்தில் சரியாக இருக்கின்றது பின்பு ஏன் குழப்பமடைகிறீர்கள்? என்று பொறுப்பற்ற முறையில் பதிலளித்துள்ளார்.
எனவே, இந்த செயற்பாடானது ஏனைய அரச திணைக்களங்களில் இடம்பெற்றாலும் நாட்டின் தலைவராக இருக்கின்ற ஜனாதிபதியின் செயற்பாடுகளில் இப்படி நடைபெறுவதாக இருந்தால் இனி எங்கு போய் முறையிடுவது என்பதே மக்களின் அடுத்த கேள்வியாக உள்ளது.
இது அதிகாரிகளின் அசமந்த போக்கா?அல்லது திட்டமிட்ட செயற்பாடா? இதனை எமது தமிழ் அமைச்சர்கள் ஏன் கண்டுகொள்வதில்லை எனவும் பொதுமக்கள் தங்களின் ஆதரங்கங்களை வெளியிட்டு வருகின்றனர்.
எனவே, உரிய அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.