அர்ஜூனாவின் போராட்டம் , புலம் பெயர்ந்தோருக்கு ஒரு அருமையான பாடம் …..

0

வடக்கில் பிறந்து , வடக்கு – கிழக்கு – தெற்கை புரிந்து , ஏற்கனவே தான் வாழ்ந்து , பணியாற்றிய இடத்துக்கு சேவை செய்ய நினைத்து , அங்கு போனால் ஊழல் அம்மணமாக ஆடுகிறதை காண முடிகிறது.

அதை மாற்ற நினைத்தால் பிரச்சனை மேல் மேல் பிரச்சனை. பிரச்சனையை சமூக ஊடகங்களில் வெளியிடும் போது , மக்கள் ஆதரவு மட்டுமல்ல , மக்களும் , தமது பிரச்சனைகளை சொல்வதோடு , வீதிக்கும் வருகிறார்கள். அரகலய போல ஒரு ஆரம்பம் போல தெரிந்தது.

வைத்தியசாலையில் என்ன பிரச்சனை என அர்ஜூனா கொடுத்த விளக்கம் போதவில்லை. அதை வெளிப்படுத்துவதை விட்டு விட்டு , தனது பின்னணியை அதிகம் பேசியது சலிப்பான விடயம் ஆனதோடு , பிரச்சனையை விட்டு அவர் குறித்த பேச்சும் மாறியது. ஊழல் விவகாரங்களை வெளியிட அவரை தயார்படுத்திக் கொள்வதற்கு முன் மக்கள் வீதிக்கு வந்ததால் நிலை தடுமாறினாரோ என தெரியாது. ஆனால் அதுவே அவருக்கு பெக் பயரானது. சைகோவா என எல்லாம் பேச வைத்துவிட்டார்கள். சிலரது உசுபேத்தல்கள் , நதிமூலம் , ரிசி மூலம் தேடுவோருக்கு பதிலழிப்பது போன்றவற்றால் சனம் திசைமாறி போனது. கெப்டன் அவுட் ஒப் த சிப்.

சொல்ல வேண்டியதை , வரிசையாக சொல்லாத,
1. வைத்தியசாலையில் இருக்க வேண்டிய வைத்தியர்கள் , வேலை நேரத்தில் வெளியே செல்வது.
2. எத்தனை வைத்தியர்கள் இருக்கிறார்கள் என அங்குள்ள மக்கள் அறியாத நிலை. (25 பேரளவு இருந்தும் 2 – 3 பேரே இருந்துள்ளனர் என்பது) ஆளணி பற்றாக் குறை பொய்கள்.
3. பல கோடி பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் பாவிக்கப்படாமல் இருந்தது.
4.அங்கு வரும் நோயாளிகளை , வைத்தியர்கள் இல்லை என அம்பியுலன்சில் யாழ் வைத்தியசாலைக்கு அனுப்புவது.
5. அங்கு வரும் நோயாளிகளை , தனியார் மருத்துவமனைகளுக்கு போகுமாறு பரிந்துரை செய்வது.
6. இறந்தவர்களது உடல்களை கொடுக்க ரேட் பேசி காலதாமதம் செய்தது.
7. பிரசவ வோட் பிரச்சனை.
8.மின்சார பிரச்சனை.
9. உபகரணங்களின் உதிரிப்பாக பிரச்சனை.

இப்படி அநேக தவறுகள் அல்ல கரிசனை கொள்ளாத விடயங்கள் தொடர்ந்து நடந்தே வந்துள்ளன.

அதை வெளிக்கொணரப் போனதே கொந்தளிப்புக்கு காரணமாகும். இவை அர்ஜூனாவால் சரியாக முன்வைக்கப்படவில்லை. அவை மக்களிடம் சரியாக ஒழுங்குபடுத்தப்பட்டு வெளியாகியிருந்தால் , அந்த போராட்டம் வெற்றி பெற்றிருக்கும். பலமாகியிருக்கும்.

பிரச்சனை எல்லோருக்கும் தெரியும் என , பிரச்சனையாளர்கள் நினைப்பதுதான் , பெரிய பிரச்சனை. வைத்தியருக்கு நோயை நாம் என்ன என சொல்லவா வேண்டும் , அவர்கள் அதுக்குதானே படித்திருக்கிறார்கள் என சொல்வது போலத்தான் இதுவும்.

போராட்டத்தின் இடையே அர்ஜுனா கொழும்புக்கு போனது ஒரு இடைவெளியை ஏற்படுத்தியது. அதற்குள் யாழிலிருந்த மாபியா கூட்டம் தங்களுக்கு ஏற்ற விதத்தில் பரப்புரைகளை செய்து மக்களை சோர்வடையச் செய்து விட்டார்கள். அதிலும் வைத்தியர்களை எதிர்த்துக்கொண்டு மக்கள் வாழ முடியாது எனும் ஒரு அச்சத்தை ஏற்படுத்திவிட்டார்கள் அல்லது அச்சம் இயற்கையாகவே ஏற்பட்டது. வைத்தியர்களோடு பகைத்துக் கொள்ளக் கூடாது எனும் ஒரு நிலை அடிப்படையிலேயே ஏற்படலாம். இது யதார்த்தமானது. எனவே ஆரம்பத்தில் கூடிய அந்த கூட்டம், அர்ச்சுனா கொழும்பிலிருந்து திரும்பி வரும்போது காணக் கூடியதாக இல்லை. அங்கே youtubers மட்டுமே அதிகமாக குழுமி இருந்தார்கள். இது ஒரு பின்னடைவுதான். அதிலிருந்து போராட்டம் பலம் இழக்க தொடங்கியதை அவதானிக்க முடிந்தது.

GMOA என்பது இலங்கையில் உள்ள ஒரு மாபியா மருத்துவ தொழிற்சங்கம் என்பது அனைவரும் அறிந்ததே! அநுருத்த பாதெனிய காலத்தில் மிக மோசமாக செயல்பட்டது. அவர்களது ஆதரவு வைத்தியர்களுக்கு இருந்தமையால் , அவர்களால் பணிபகிஸ்கரிப்பு நாடகத்தை அரங்கேற்றுவது இலகுவானது. அதை வைத்துத்தான் வைத்தியர்கள் தம்மை காத்துக் கொண்டனர். அதிலும் அநேக வடக்கு அரசியல்வாதிகள் ,வைத்தியர்களுக்கு சார்பாக இருந்தது , சுகாதார அமைச்சர் வந்த போது வெளிப்படையாக தெரிந்தது. வயதான காலத்தில் , வைத்தியர்களை பகைத்துக் கொள்ள முடியுமா? மாபியா சட்டத்தரணிகள் மக்கள் மீது மிக கரிசனை உள்ளது தெரிந்தது. அதிலும் வெளியே பேசுவது தேசியம்?

சுகாதார அமைச்சர் கூட , பிரச்சனைக்குரிய வைத்தியசாலைக்கு சென்று உள்ள நிலைமையை அவதானிக்காமல் , யாழ் வைத்தியசாலையில் மரம் ஒன்றை புடுங்கிவிட்டு , நிலமை சுமூகமாக இருப்பதாக தண்ணி தெளித்துவிட்டு கடந்து போனார். தங்கையை காட்டி அக்காவை கொடுப்பது போல , அவருக்கு யாழ்பாணத்தைத்தான் சாவக்கச்சேரி என காட்டினார்களோ?

அருகே நின்ற பொம்மை அரசியல்வாதிகள் , படத்துக்கு போஸ் கொடுத்தார்களே தவிர , பிரச்சனைக்குரிய சாவக்கச்சேரி வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று பார்வையிடவாவது அழைக்கவே இல்லை.

ஒருவரின் ஆசை வந்த அமைச்சருக்கு கூழ் செய்து கொடுக்கவில்லை என்பதாகும். ஆனால் இதே அரசியல்வாதிகள் , பாராளுமன்ற பேச்சுரிமையை வைத்து மைக் டைசன்களாக கத்துவதெல்லாம் வெறும் வேசம்தான். இவர்களை மக்கள் அடையாளம் காண இது ஒரு நல்ல தருணம் என நினைக்கிறேன். அதெங்கே?

ஆனால் சனம் தங்கள் அரசியல்வாதிகளை விட்டுக் கொடுப்பார்களா என்பது சொல்லத் தெரியாது. காரணம் இவர்களது தொழிலே போலி அரசியல்தானே? கோஷம் மட்டும் தான் ஆட்டம் கிடையாது. விசில் மட்டும் தான் யாரும் ஓட மாட்டார்கள். இதைப் புரிந்து கொள்ள எவ்வளவு காலம் எடுக்குமோ தெரியாது.

சாவக்கச்சேரியில் நடந்த பிரச்சனைகளை அல்லது, மக்களின் நிலையை அழைத்து சென்று காட்ட , அவர்களுக்கு தைரியம் இல்லை. இதற்கு அமைச்சர் வராமலே இருந்திருக்கலாம். இவற்றுக்கு அரசு காரணமல்ல, வடக்கு பிரதிநிதிகள்தான் காரணம். அவர்களும் மாபியா வைத்தியர்களுக்கு ஆதரவாகவே செயல்படுகிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தன. தம்பிராசா என்பவர் மட்டுமே பிரச்சனைகளை எழுப்ப முற்பட்டு போலீசாரால் அகற்றப்பட்டார்.

பொதுவாக தென்பகுதிகளில் இப்படி கேள்வி கேட்ட ஒருவரை போலீசார் இழுத்துக் கொண்டு போக முயன்றால், அருகே இருப்பவர்கள் உடனடியாக பாய்ந்து தடுக்க முற்படுவார்கள். ஆனால் இங்கிருந்தவர்கள் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இதுதான் வித்தியாசம். அந்த நேரத்தில் ஒரு சிலராவது தடுத்து, தம்பி ராசாவை கைது செய்து கொண்டு போக விடாது சமரசம் செய்திருக்கலாம். இதனால் இனிவரும் காலங்களில் எந்த ஒரு பொது மகனும், இப்படியான இடங்களில் குற்றங்களை எதிர்த்து பகிரங்கமாக கேள்வி கேட்க முன்வர மாட்டான். இது ஒரு பலவீனமான நிலை. அவரது ஆதரவுக் கட்சியாளரான அரசியல்வாதி தவறாசா அவர்களும் எதிர்ப்பே தெரிவிக்கவில்லை.

அரசை எதிர்க்கும் அத்தனை அரசியல்வாதிகளும், திறப்பு விழா ஒன்றுக்கு வந்த அமைச்சரை வரவேற்க வந்தது போலவே செயல்பட்டார்கள். உண்மையான பிரச்சனையை எவருமே முன் வைக்கவில்லை. ஏதோ யாழில் உள்ள பொது பிரச்சனைகளை பேசி மாபியா வைத்தியர்களை காப்பாற்றி விட்டார்கள். இந்த அரசியல்வாதிகள் எவருமே மக்கள் பக்கம் இல்லை.

அரசு சார்ந்த டக்ளஸ் தேவானந்தா இவர்களை விட இவ்வளவு மேல் என சொல்லலாம். அவரது முன்னைய கருத்துக்கள் அர்ஜுனாவை மீண்டும் பதவியில் வைக்க வேண்டும் என்பதாக இருந்தது. அதை அவருக்கு செய்ய முடியாது என நினைத்திருக்க வேண்டும். அதனால் அன்றைய தினம் அவர் அங்கு வருவதை தவிர்த்திருக்க வேண்டும்?

அரசுக்கு இருக்கும் பிரச்சனை நாடு முழுவதும் வேலை நிறுத்தங்கள் நடந்து கொண்டிருக்கும்போது இதனால் வடக்கிலும் வைத்திய வேலை நிறுத்தம் ஒன்று ஏற்பட்டால் அது நிச்சயம் தெற்கிலும் பரவ வாய்ப்புள்ளது. அதுவும் தேர்தல் காலத்தில் ….. எனவே அரசு மாபியாக்களை கண்டுகொள்ளாது நேர்மையான அர்ஜுனாவை கொழும்புக்கு திருப்பி அழைத்துக் கொண்டார்கள். அவர்களுக்கு இந்த பிரச்சனை தெரியாமல் இல்லை. ஆனால் இந்த நேரத்தில் வைத்திய சங்கத்தோடு முரண்பட விரும்ப மாட்டார்கள்.

வடக்கு அரசியல்வாதிகளும் அமைதி காக்க, மக்களும் அமைதி காக்க, யாழ் வைத்தியசாலை நன்றாக இருக்க, கூழ் குடிக்காத குறையாக , சுகாதார அமைச்சர் மகிழ்ச்சியோடு எல்லாம் நல்லா இருக்கிறது என்று சொல்லிவிட்டு ஊருக்கு கிளம்பினார். அங்கு இருந்தவர்கள் கூழ் குடித்து இருப்பார்கள்.

அர்ஜுனாதான் வெறுத்துப் போய் வடக்கே வேண்டாம் என ; இந்த பழம் புளிக்கும் என சொல்லிவிட்டு வந்த வழியே திருப்பி ஓட்டம் எடுத்தார். இறுதியாக அவர் எடுத்த முடிவு மிகச் சரியானது. இவர்களுக்காக வீதியில் இறங்கி உயிர் விடுவதை விட, கொழும்புக்கு போய் சிங்களப் பகுதிகளில் சிறப்பாக வாழ்வார். அதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.

இன்னும் ஒன்று அவருக்கு இது ஒரு நல்ல பாடமாக இருக்கும். அப்துல் கலாம் கனவு காணச் சொன்னார் என, வடக்கை திருத்த கனவு கண்ட அர்ச்சுனா, இனி அவரது புதிய நியமன இடங்களில் இந்த அனுபவத்தோடு சிறப்பாக செயல்படுவார். இறுதி நேரத்தில் அவரது பேட்டிகள் கூட மிகவும் யதார்த்தமாக மாறிப் போயிருந்தது. அவர் வடக்கை விட்டு வெளியேறியது வடக்கு மக்களுக்கு பெரியதொரு இழப்பாகும். அவருக்கு இனித்தான் நல்ல காலம்.

புலம்பெயர் நாடுகளில் இருந்து அனேகர் தாயகம் சென்று மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என கனவும் ஆசையும் கொண்டு பேசுவது அனைவரும் அறிந்ததே. இலங்கையில் போர் பகுதிகளிலும், சிங்களப் பகுதிகளிலும் வாழ்ந்த, மூன்று மொழிகள் தெரிந்த, ஒரு கல்வியாளருக்கே வடக்கில் இந்த நிலை என்றால், புலத்திலிருந்து அங்கு போய் மாற்றங்கள் செய்ய நினைத்தால் உங்களுக்கு என்ன நடக்கும் என நான் சொல்லி நீங்கள் அறிய தேவையில்லை. அங்கு போய் உங்களால் செய்யக்கூடிய ஒரே ஒரு விடயம் கோயிலுக்கு போவது , கோயில் கட்டுவது, கும்பாபிஷேகம் நடத்துவது, இவற்றைத் தவிர்த்து வேறு எதுவும் செய்ய முயற்சி செய்யாதீர்கள். அப்படி மாற்றம் ஒன்றை செய்ய நினைத்து நீங்கள் அங்கு போனால் அர்ஜுனாவை விட மோசமான விளைவுகளை தான் நீங்கள் சந்திப்பீர்கள். அதில் மாற்றுக் கருத்தே இல்லை.

– ஜீவன்

Leave A Reply

Your email address will not be published.