சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்தவைக் கொல்ல வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இக்கொலையுடன் தொடர்புடைய பெண் உட்பட மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கிளப் வசந்த என்ற சுரேந்திர வசந்த பெரேரா கடந்த ஜூலை 8ஆம் திகதி அத்துருகிரியவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதன்படி, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேகத்தின் பேரில் 7 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், அவர்கள் ஜூலை 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் பின்னர், கொலையுடன் தொடர்புடைய பெண் உட்பட மேலும் பல சந்தேக நபர்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கொலைச் சம்பவத்தின் பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் செல்வதற்காக விசேட பஸ் ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அதன் மூலம் அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் முன்னாள் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இருவர் உள்ளிட்ட குழுவினர் அத்துருகிரிய பகுதியில் ஆறு இலட்சம் ரூபாய் செலுத்தி 6 மாத காலத்திற்கு வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து தங்கியிருந்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் கயங்க மாரப்பனவின் நேரடி அறிவுறுத்தலின் பேரில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன