போலியான முறைகளில் அதிநவீன அதிசொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு உதவிய சுங்க அதிகாரிகள் மற்றும் அந்த வாகனங்களை பதிவு செய்வதற்கு உதவிய மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளை உடனடியாக கைது செய்யுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு நீதிமன்றம் நேற்று (28) உத்தரவிட்டுள்ளது.
சுங்கத்தினால் அனுமதி பெறப்படாத நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுத்த மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளை உடனடியாக விரிவான விசாரணை நடத்தி கைது செய்யுமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் இரகசிய மற்றும் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இலங்கை சுங்க அதிகாரிகளால் அனுமதிக்கப்படாத சொகுசு ஜீப்கள் உட்பட பல வாகனங்கள் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.