ஜனாதிபதியை திருப்திப்படுத்தும் மத்திய வங்கியின் ஆளுநர்

0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை திருப்திப்படுத்துவதற்காக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க பொருளாதாரம் தொடர்பாக சில அறிக்கைகளை வெளியிட்டு வருவதாக NPP உறுப்பினர் கலாநிதி நலித ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி ஆளுநர் ஒரு கலாநிதி மற்றும் துறைசார் நிபுணர் என்ற வகையில் அரசியல்வாதிகள் விரும்பும் வகையில் அறிக்கைகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையின் கீழ் தற்போது நடைமுறையில் உள்ள சீர்திருத்த நிகழ்ச்சி நிரலில் இருந்து நாடு விலகினால் பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என கலாநிதி வீரசிங்க தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கலாநிதி ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“மத்திய வங்கி ஆளுநர், ஒரு கலாநிதி மற்றும் துறைசார் நிபுணர் என்ற வகையில், அரசியல்வாதிகள் சொல்வதைக் கூறக்கூடாது. அவர் தனது கல்வி அறிவைப் பயன்படுத்தி நடைமுறை விடயங்களைத் தெரிவிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

பொருளாதார திவால்நிலைமை தொடர்பில் கடந்த காலங்களில் இதேபோல் மத்திய வங்கி ஆளுநராக இருந்த ஒருவர் உயர் நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டுள்ளார் எனவும் கலாநிதி ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.