தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பத்திற்கான திகதிகள் அறிவிப்பு!

0

நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் செப்டம்பர் 30 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 7 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தத் தேர்தலிலும் 2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல்கள் பயன்படுத்தப்படவுள்ளதால், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தபால் மூல விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த அனைவரும் இந்தத் தேர்தலுக்காக மீண்டும் தபால் மூல விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது தேவையற்றது என அவர் விளக்கமளித்துள்ளார்.

கொழும்பில் இன்று (26) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

இந்தத் தேர்தலில், முந்தைய வாக்காளர் பட்டியல்கள் பயன்படுத்தப்படுவதால், ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளுக்கன விண்ணப்பங்களை சமர்ப்பித்த அனைவருக்கும்  மீண்டும் தபால் வாக்குகளுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. உங்களது விண்ணப்பங்கள்  தொடர்பான அனைத்து தரவுகளும் எங்களிடம் உள்ளன.

ஆனால் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு நீங்கள் சமர்ப்பித்த தபால் மூல விண்ணப்பம் ஏதேனும் காரணத்தினால் நிராகரிக்கப்பட்டால், நிராகரிப்பு தொடர்பான விடயத்தை சரி செய்து மீண்டும் தபால் மூல விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

அதாவது கடந்த முறை தபால் மூல வாக்குகளுக்கான  விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏதேனும் காரணங்களுக்காக தபால் மூல வாக்கு விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்காமல், தேர்தல் கடமைகளுக்குப் பணிக்கமர்த்தப்படும்  என எதிர்பார்க்கப்படும் சேவைப் பிரிவைச் சேர்ந்தவராக  நீங்கள் இருந்தால்,  மீண்டும் தபால் வாக்கு விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கவுள்ள நிலையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கடைப்பிடிக்கப்பட்ட விதிமுறைகள் அப்படியே செல்லுபடியாகும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.