ராஜபக்சர்கள் திருடர்கள் என்றால் உடனடியாக சட்டத்தினை நடைமுறைப்படுத்தி அதன் உண்மைத் தன்மையினை நிரூபிக்குமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெருமளவான டொலர்களை கொள்ளையடித்து உகண்டாவுக்கு ராஜபக்சர்கள் கொண்டு சென்றார்கள் என தெரிவித்த அநுர குமார தரப்பினர் தற்போது அது தொடர்பான உண்மைத் தன்மையினை நிரூபிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ராஜபக்சர்கள் திருடர்கள் என கடந்த காலங்களில் கூறியிருந்தீர்கள். 18பில்லியன் டொலர்களை உகண்டாவுக்கு விமானம் மூலம் கொண்டு சென்றதாக தெரிவித்தீர்கள். உடனடியாக இது குறித்து சாட்சிகளை தேடி உடனடியாக விசாரணை குழுவொன்றினை நியமித்து இவற்றை கண்டுபிடியுங்கள்.
ஏனெனில், இந்தப் பணத்தினை வெளிநாட்டுக்கு அனுப்பியதாக நீங்கள் தான் கூறியிருந்தீர்கள். இதனை கண்டுபிடிக்காது விட்டால் இதன் பின்னால் மக்கள் விடுதலை முன்னணிதான் இருக்கும் என மக்கள் நினைப்பார்கள்.
நாடாளுமன்ற தேர்தலுக்கும் பழைய கதையினையே கூறி ஊடக நாடகத்தினை முன்னெடுக்க வேண்டாம் எனவும் அது நாட்டுக்கு செய்யும் பாரிய அநீதியாகும் என குறிப்பிட்டுள்ளார்.