முந்தைய நிர்வாகத்தில் மதுபான அனுமதிப்பத்திரங்களைப் பெற்று விநியோகம் செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பெயர்களை உடனடியாக அரசாங்கம் வெளியிட வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் நேற்று மாலை கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய சுமந்திரன், குறிப்பாக நாடு முழுவதும் மதுபானசாலைகள் பெருகுவது தொடர்பில் சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், வெளிப்படைத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தினார்.
தேவையற்ற பலன்களைக் குறைத்து, ஆட்சியில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவது மிகவும் முக்கியமானது என்று கூறி, சலுகைகளைக் குறைப்பதற்கான தனது கட்சியின் ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார்.
இதற்கிடையில் வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்கான அவரது கட்சியின் வேட்புமனுக்கள் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.
இம்முறை புதிய இளம் முகங்களை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கிறோம் என்றும் குறிப்பாக பெண் வேட்பாளர்களை ஊக்குவிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.