இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா வீசிய வெடிகுண்டு ஜப்பானிய விமான நிலையத்தில் வெடித்தது.
ஜப்பானில் உள்ள மியாஸாக்கி ((Miyazaki) விமான நிலையத்தில் புதைந்துகிடந்த அமெரிக்க வெடிகுண்டு நேற்று முன் தினம் -(02) வெடித்ததால் 80 க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டன.
இதனால் விமான நிலையத்தின் ஓடுபாதைக்கு அடுத்துள்ள ரக்ஸிவே பகுதியில் ஏழு மீற்றர் (23 அடி) அகலமும் ஒரு மீற்றர் (3.2 அடி) ஆழமும் கொண்ட துளை உண்டானது.
சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. குண்டு வெடித்தபோது அருகில் விமானங்கள் எதுவும் இல்லை என்று BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இரண்டாம் உலகப் போரின்போது அந்த பகுதியில் அமெரிக்கா வீசிய வெடிகுண்டுகள் அங்குப் இருக்கலாம் என நம்பப்படுவதுடன் 230 கிலோகிராம் எடை கொண்ட அமெரிக்க குண்டு வெடித்ததை ஜப்பானின் வெடிகுண்டு அகற்றும் பிரிவு உறுதிசெய்தது.
மியாஸாக்கி விமான நிலையம் 1943 ஆம் ஆண்டு ஜப்பானிய கடற்படை தளமாக கட்டப்பட்டது.
2009 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவால் வீசப்பட்ட குண்டுகள் ஜப்பானில் பல கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 41 தொன் எடையுள்ள 2,348 குண்டுகள் அகற்றப்பட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.