தற்போது கலைக்கப்பட்டுள்ள ஒன்பதாவது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் முதுமை, உடல்நலக்குறைவு, அவர்களுக்கு சாதகமற்ற அரசியல் நிலைகள் போன்ற காரணங்களால் அரசியலில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் பாரம்பரியக் கட்சிகளைப் பொறுத்த வரையில் அரசியல் இயக்கங்கள் அடியோடு மாறி வருவதாகத் தெரிகிறது. சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக, பாரம்பரிய பிரதான போக்குடைய கட்சிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியான தேசிய மக்கள் சக்தி, ஜனாதிபதித் தேர்தலில் ஈட்டிய வெற்றி நவம்பர் 14 அன்று பொதுத் தேர்தலில் பாராளுமன்ற அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான களத்தையும் அமைத்துள்ளது.
தற்போதைய பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக தம்மிடம் இருந்து வெளியேறிய எம்.பி.க்களுக்கு வேட்புமனு வழங்குவதில்லை எனத் தீர்மானித்துள்ளது. இந்நிலை குறித்த எம்.பி.க்களை வேறு வேறு கூட்டணிகளில் இருந்து சீட்டு பெற தூண்டியுள்ளது.
மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரது மூத்த சகோதரர் சமல் ராஜபக்ஷ, காமினி லொக்குகே மற்றும் அலி சப்ரி உள்ளிட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை போட்டியிட மாட்டார்கள். திரு.சமல் ராஜபக்ச தான் போட்டியிடப் போவதில்லை என்பதை உறுதிப்படுத்தினார். எனினும் அவரது மகன் சஷீந்திர ராஜபக்ச மொனராகலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளார்.