உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் செலுத்த வேண்டியிருந்த எஞ்சிய நட்டஈட்டு தொகையான 65 மில்லியன் ரூபாவை செலுத்தி முடித்திருப்பதாக, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன உயர் நீதி மன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
நிலந்த ஜயவர்தன அவரது சட்டத்தரணி மூலம் இதனை உயர் நீதி மன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களின் அடிப்படையில், தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடாக 75 மில்லியன் ரூபா வழங்கப்பட வேண்டும் என்று, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தனவுக்கு உயர் நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
நிலந்த ஜயவர்தன ஏற்கனவே இத்தொகையில் 10 மில்லியன் ரூபாவை செலுத்தியிருந்தார். தற்போது இந்த இறுதித் தொகையுடன் முழுத் தொகையையும் அவர் செலுத்தியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஒரு நபருக்கு 01 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் திகதி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே நம்பகமான தகவல்கள் இருந்தபோதிலும், தாக்குதலைத் தடுக்க குறிப்பிடப்பட்ட பிரதிவாதிகள், தவறியமை தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமைகள் மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்தன.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சிசிர மெண்டிஸ் மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி நிலாந்த ஜயவர்தன ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
இதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை 100 மில்லியன் ரூபாவை இழப்பீடாக வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு மேலதிகமாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் தலா 75 மில்லியன் ரூபாவை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் உயர் நீதி மன்றம் அறிவித்தது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 50 மில்லியன் ரூபாவை செலுத்தவும் அறிவுறுத்தியிருந்தது. தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சிசிர மெண்டிஸையும் 10 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிதி அனைத்தும் சேகரிக்கப்பட்டு 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.