பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ரூ. 500,000 இலவச முத்திரைகளில் எஞ்சியவற்றை அருகில் உள்ள தபால் அலுவலகத்தில் அல்லது பாராளுமன்றத்தில் ஒப்படைக்குமாறு தபால் திணைக்களம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து, இம்முத்திரைகளைப் பயன்படுத்துவதற்கு தடையென, தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, பயன்படுத்தப்படாத முத்திரைகளை பாராளுமன்ற தபால் அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு, தபால் மா அதிபர் அறிவித்துள்ளார்.
குறித்த முத்திரைகளை செல்லுபடியற்றதவையாக கருதப்பட வேண்டுமென, நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்களுக்கும் தபால் மா அதிபர் அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வருடாந்தம் ரூ. 5 இலட்சம் பெறுமதியான முத்திரைகள் இலவசமாக வழங்கப்படும் என்பதோடு, பாராளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகளும் இல்லாமலாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.