இரண்டரை மணிநேர போராட்டத்துக்கு பின்னர் தமிழ் நாட்டின் திருச்சி மாவட்ட வானில் வட்டமடித்து கொண்டிருந்த விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 8.25 அளவில் இந்த விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது. சுமார் 144 பயணிகளுடன் திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாயின் சார்ஜாவுக்கு இன்று மாலை 5.40 மணிக்கு இந்த எயார் இந்தியா விமானம் புறப்பட்டது.
எனினும், இந்த ஏர் இந்தியா விமானத்தின் அடிப்பாகத்தில் உள்ள சக்கரம் உள்ளே செல்லாததால் அது பயணத்தை தொடராமல், வானில் வட்டமிட்டு வந்தது.
இந்தநிலையில், நிலத்திலிருந்து 4255 அடி உயரத்தில் கடந்த இரண்டு மணி நேரமாக வட்டமடித்து வந்த விமானத்தை மீண்டும் திருச்சி விமான நிலையத்திலேயே தரையிறக்க முடிவு செய்யப்பட்டது.
எனினும்,விமானத்தின் நிறையை குறைப்பதற்காக, அதில் உள்ள எரிபொருள் தீர்ந்து போகும் வரையில் வானில் வட்டமிட்ட நிலையில், விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.