கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் 17 வயதான மகன் மிகவேகமாக செலுத்திய ஜீப் வண்டி, முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த சிறுவனை கொன்றுள்ள சம்பவமொன்று கம்பளையில் இடம்பெற்றுள்ளது.
கம்பளை பஸ் நிறுத்துமிடத்துக்கு முன்பாகவுள்ள பாதசாரி கடவைக்கு முன்பாக பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியை, அந்த ஜீப் பின்னால் மோதியுள்ளது. அந்த முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்றரை வயதான சிறுவன், கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில், கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
வெளிநாட்டில் இருந்து கம்பளை இல்லவத்துரு பிரதேசத்துக்கு வந்திருந்த மொஹமட் சிராஸ் அம்டே என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
முச்சக்கரவண்டியின் பின்னால் மோதியதன் பின்னர் அந்த ஜீப் வண்டி, அவ்விடத்தில் நிறுத்தாமல், சுமார் 55 மீற்றர் முன்னால் சென்று, கம்பளை தனியார் பஸ் நிறுத்துமிடத்துக்குள் சென்று திரும்பும் போது, அங்கு பழங்கள் விற்றுக்கொண்டிருந்தவர் மீதும் அவருக்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மற்றுமொரு முச்சக்கரவண்டியின் மீதும் மோதி நின்றுள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.