சட்டவிரோதமான முறையில் ஒருங்கினைக்கப்பட்ட சொகுசு காரை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் சாட்சியமளிக்க அவகாசம் கோரிய நிலையில், தற்போது அவர் தலைமறைவாகியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் விசாரணையை முன்னெடுக்க விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் அவரை தொடர்புகொள்ள முயற்சித்த போதும் அது பலனலிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், மேலும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீடு மற்றும் தங்கும் இடங்களில் நடத்திய சோதனையில் அவர் பற்றிய எவ்வித தகவலும் கிடைக்கப்பெறவில்லை என கூறப்படுகிறது.
அண்மையில், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் சர்ச்சைக்குறிய கார் தொடர்பான வாக்குமூலத்தைப் பெற குற்றத்தடுப்பு பிரிவுக்கு வருமாறு தெரிவித்திருந்த போதிலும், அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறி அதைத் தவிர்த்து வந்தார்.
இந்நிலையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவு வெளிநாடு செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு ஒன்றையும் கடந்த 10.10.2024 அன்று பிறப்பித்திருந்தது.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த சொகுசு வாகனம் எவ்வாறு இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டது, யார் பயன்படுத்துகின்றனர் என்பது குறித்து விரிவான விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவாகியுள்ளதான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.