ரயிலைக் கவிழ்க்கும் சதித்திட்டங்கள் முறியடிப்பு
பயணிகளின் ரயிலைக் கவிழ்க்கும் வகையில் இடம்பெறும் தொடர் சதித்திட்டங்களால் ரயில் பயணிகள் பீதியிலுள்ளனர். குறிப்பாக இம்மாதம் மட்டுமே 5 தடவைகள் ரயிலைக் கவிழ்க்கும் சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று காலை, பஞ்சாப்பிலும் இதுபோன்றதொறு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பஞ்சாப்பிலுள்ள ரயில்வே தண்டவாளத்தில் இரும்பு கம்பிகளைப் போட்டு ரயிலை கவிழக்க நடந்த சதி திட்டம், லோகோ பைலட்டின் சாதுர்யத்தால் முறியடிக்கப்பட்டது.
பஞ்சாப் மாநிலத்தின் பதின்டா மாவட்டத்தில் சமூக விரோதிகள் சிலர், ரயிலை கவிழ்க்க சதி திட்டம் போட்டுள்ளனர். இன்று அதிகாலை 3 மணியளவில் பதின்டா – டில்லி ரயிலேவே தண்டவாளத்தில் 9 நீண்ட கம்பிகளைப் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். அந்த சமயம் அந்த வழியாக ரயில் வந்த போது, அதனை இயக்கி வந்த லோகோ பைலட், தண்டவாளத்தில் கம்பிகள் இருப்பதைக் கண்டு சுதாரித்து, ரயிலை நிறுத்தியுள்ளார்.
பின்னர், தண்டவாளத்தில் கம்பிகளை போட்டது குறித்து ரயில்வே பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்மையில், உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் தண்டவாளங்களில் சிலிண்டர், டெட்டனேட்டர்களை வைத்து ரயில்களை கவிழ்க்க மர்ம நபர்கள் தீட்டிய சதித் திட்டம் முறியடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 5 முறை ரயில்களை கவிழ்க்க சதி நடந்திருப்பது ரயில் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது