எதிர்வரும் தேர்தலில் சகல கட்சிகளும் ஒற்றுமை என்று சொல்லி காலத்தை வீணடிக்காமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்தில் ஒன்றாக போட்டியிடவேண்டும் என முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (26.09.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
“எதிர்வரும் பொதுத் தேர்தலானது தமிழர்களின் ஒன்றுமையை வலுப்படுத்தி இருப்பை காக்கவேண்டிய ஒரு தேர்தல். அந்த ஒற்றுமையை வலியுறுத்தும் வண்ணம் முன்னாள் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 11 பேர் மாவை சேனாதிராஜாவை சந்தித்து கலந்துரையாடினோம்.
சகல கட்சிகளையும் உள்வாங்கி தமிழ் தேசிய கூட்டமைப்பாக தமிழ்த் தேசிய அணியாக செயற்ப்படுவதனை வலியுறுத்தியே அந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
எனவே, அனைத்து கட்சிகளும் ஒற்றுமை என்று சொல்லி காலத்தை வீணடிக்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தமிழரசுக்கட்சியின் வீட்டு சின்னத்தில் ஒன்றாக போட்டியிடவேண்டும். இது எனது சொந்த கருத்தாக இருந்தாலும் தமிழரசுக் கட்சியின் அதிகமானோரது நிலைப்பாடும் இதுவே” எனக் கூறியுள்ளார்.