இலங்கையில் விசா மோசடி தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய கணக்காய்வு அலுவலகம் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக விசா வழங்குவது தொடர்பில் முறைகேடுகள் இடம் பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது.
புதிய நாடாளுமன்றம் கூடும் காலத்திற்கு முன்னதாக இந்த கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பிக்க முடியும் என கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி விக்ரமரத்ன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, ஈ-கடவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்தல் குறித்த நடைமுறைகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு அந்த அறிக்கையும் வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
விசா விண்ணப்பங்களை கையாள்வதற்கு வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டமை தொடர்பில் அதற்காக செய்யப்பட்ட செலவுகள் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அறிவித்துள்ளார்.