தேசிய மக்கள் சக்தியின் வாழ்வும் மரணமும் அம்பாரை முஸ்லிம் வேட்பாளர்கள் தெரிவில் இருக்கின்றது.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுர குமார திஸாநாயகவிற்கு அம்பாரை மாவட்ட முஸ்லிம்களின் வாக்குகள் எதிர்ப்பார்த்தை விட மிகவும் அதிகமாகக் கிடைத்திருப்பது மாற்றத்திற்கான தேவையை அம்பாரை முஸ்லிம்களும் உழுத்துப் போன முஸ்லிம் கட்சி அரசியலுக்கப்பால் உணர்ந்திருப்பது மிகவும் ஒரு முக்கியமான விடயம். முஸ்லிம் காங்கிறஸ், மக்கள் காங்கிறஸ், தேசிய காங்கிறஸ் போன்ற முஸ்லிம் அரசியல் கட்சிகளின் செல்வாக்குகளுக்குள் மாத்திரம் கட்டுண்ட அம்பாரை மாவட்ட முஸ்லிம் அரசியல் இவைகளை உதறித்தள்ளி தங்களுக்கு அதிக பரிச்சயம் இல்லாத ஒரு மாற்று சக்திக்கு பின்னால் கணிசமான அளவு திரும்பி இருப்பது இதுவரை காலமும் அம்பாரை முஸ்லிம் அரசியலை ஆக்கிரமித்திருந்த அடையாள அரசியலில் இருந்து விலகி தேசிய அரசியல் நீரோட்டத்தில் மீண்டும் சங்கமிக்க நினைக்கும் மக்களின் மன நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் அதிகமான மக்கள் தேசிய மக்கள் சக்தியில் சாரை சாரையாக இணைந்து கொண்டிருக்கிறார்கள். அறுதிப்பெரும்பான்மையைத் தாண்டி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொண்டால்தான் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்களித்த விடயங்களை நிறை வேற்ற முடியும்.
இந்தப் பின்புலத்தில்தான் தேசிய மக்கள் சக்தியின் அம்பாரை முஸ்லிம்களுக்கான பாராளுமன்றத் தேர்தலுக்கான தயார்படுத்தலை புரிந்து கொள்ள வேண்டும். அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் கல்முனை, சம்மாந்துறை மற்றும் பொத்துவில் தொகுதிகளில் சுமார் 37,000 வாக்குகளை தேசிய மக்கள் சக்தி நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் பெற்றிருக்கிறதென்பது பெரிய விடயம் மாத்திரமல்ல பாரம்பரிய முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு மிகப்பெரும் தலைவலியைக் கொடுத்துக் கொண்டிருக்கின்ற விடயம்.
தெற்கில் தொடர்ச்சியாக அரசியலில் ஈடுபட்ட தேசிய மக்கள் சக்திக்கு கிழக்கிலங்கை முஸ்லிம் அரசியல் சம்பந்தமாக பரிச்சயம் இல்லை. அதன் உயர் பீடத்தில் கூட கிழக்கு முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் இல்லை. இதுவரை காலமும் ஒவ்வொரு ஊரிலும் பிரபலமில்லாத, மேடைப்பேச்சுகள் தெரியாத ஒன்று இரண்டு நபர்கள்தான் தேசிய மக்கள் சக்தியின் நோட்டீசை ஒட்டுவதும் பின்னர் பெயரளவில் வேட்பாளர்களாக நின்று 200 வாக்குகள் எடுத்துத் தோற்றுப் போவதும் வழமையாக இருந்து வந்திருக்கிறது. இவற்றைத் தவிர அம்பாரை மாவட்ட முஸ்லிம் அரசியலின் வெட்டுமுகம், தன்மை, வாக்காளர் மன நிலை போன்ற முக்கியமாக விடயங்களை ஆராய்ந்து முடிவுகள் எடுக்கும் எந்த ஆளுமைகளும் தேசிய மக்கள் சக்திக்கு இல்லை.திடீரென ஜனாதிபதித் தேர்தலில் எழும்பிய அலையில் அதிகரித்துவிட்ட ஆதரவால் தேசிய மக்கள் சக்தியால அம்பாரை முஸ்லிம் பிரதேசங்களுக்கு நியமிக்கப்பட்டிருந்த அமைப்பாளர்கள் திக்குமுக்காடிப் போயுள்ளனர். வரும் மக்களை எப்படி அனுசரிப்பது, தக்கவைப்பது, பெரிய கூட்டங்களை எப்படி நிர்வகிப்பது என்பதெல்லாம் தெரியால் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். இதுதான் அம்பாரையில் தேசிய மக்கள் சக்தியின் நிர்வாகத்தில் நடந்து கொண்டு வருகின்ற விடயம். இதனால் அம்பாரை முஸ்லிம்களின் விவகாரங்களை முடிவு செய்யும் விடயமும் அம்பாரையில் உள்ள சிங்கள் அமைப்பாளர்களின் கைகளில் இருக்கின்றதால் முஸ்லிம் அமைப்பாளர்களால் அதிகம் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது.
அது அப்படி இருக்க, ஜனாதிபதித்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அம்பாரை முஸ்லிம்களிடமிருந்து பெற்ற 37000 வாக்குகளையும் இன்னும் அதிகரித்து எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஆககுறைந்தது ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்யத் தவறுமானால் அம்பாரை முஸ்லிம் அரசியலில் இருந்து தேசிய மக்கள் சக்தி மாயமாக மறைந்து விடும். அதன் விளைவை பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து வரும் மாகாண சபைத் தேர்தலில் அவதானிக்கலாம்.
Related Posts
இந்த நிலையைத் தவிர்த்துக் கொள்ள அம்பாரையின் பொத்துவில், சம்மாந்துறை, கல்முனை ஆகிய முஸ்லிம் பெரும்பான்மைத் தொகுதிகளில் தேசிய மக்கள் சக்தி நிறுத்தும் வேட்பாளர்கள் யார் என்பதில்தான் அம்பாரை முஸ்லிம் அரசியலில் தேசிய மக்கள் சக்தி நிலைக்குமா இல்லையா என்பது இருக்கிறது. ஒரு ஜனாதிபதித் தேர்தலில் மக்களுக்கு இருக்கும் மனநிலையும் பாராளுமன்றத் தேர்தலில் இருக்கும் மன நிலையும் முற்றிலும் வேறுபட்டது. எப்படியும் ஒரு சிங்களவர்தான் ஜனாதிபதியாக வருவார் அவர் முஸ்லிம்களுக்கு வாசியாக இருந்தால் போதும் என்பதுதான் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு முஸ்லிம் வாக்காளனின் மன நிலை.
பாராளுமன்றத் தேர்தல் அவ்வாறானது அல்ல. இது மக்களின் உள்வீட்டு அரசியல்.அந்தந்த மக்களின் நேரடித் தலைவரைத் தெரிவு செய்யும் அரசியல் களம் அது. அபிமான அரசியலில் ஊறிப்போயுள்ள மக்கள் வாக்களிக்கப்போவது கட்சிக்கப்பால் வேட்பாளருக்கே.
அம்பாரை முஸ்லிம்களும் அரசியல் புது முகங்களை விரும்புகிறார்கள். ஜனரஞ்சகமான புதிய அரசியல் தலைமைகளை விரும்புகிறார்கள்.முஸ்லிம் காங்கிறசின் வாக்காளர்கள் கூட புது முகங்களை எதிர்பார்க்கிறார்கள்.அப்படி முஸ்லிம் காங்கிறஸ் மீண்டும் ஹரீஸ், பைசல் காசிம் போன்ற அரசியல்வாதிகளை இறக்கினால் காங்கிறஸ் இளைஞர்கள் தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்க முடிவு செய்வார்கள். அதனால் தேசிய மக்கள் சக்திக்கு இன்னும் ஆதரவு அதிகரிக்கும். இவை எல்லாம் தேசிய மக்கள் சக்தி அம்பாரை முஸ்லிம்களுக்கான தெரிவு செய்யும் வேட்பாளர்களில் தங்கி உள்ளது.
தேசிய மக்கள் சக்தி நன்றிக்கடனுக்காகவோ அல்லது விசுவாசத்தை எதிர்பார்த்தோ அவ்வவ்வூர்களில் அவர்களுக்காக வேலை செய்யும் பிரபலமற்ற நபர்களை வேட்பாளர்களாக இறக்குவார்களாக இருந்தால் ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த வாக்குகளும் இம்முறை இல்லாமல் போகும்.கல்முனை, அம்பாரை மற்றும் பொத்துவில் தொகுதிகளுக்கு ஆளுமையுள்ள, ஜனரஞ்சகமான புது முகங்களை தேசிய மக்கள் சக்தி நிறுத்தாமல் பிரபலமற்ற கட்சித் தொண்டர்களை நிறுத்துவார்களாக இருந்தால் மக்கள் மீண்டும் தங்களுக்குப் பிரபலமான 3 காங்கிறஸ்களினதும் வேட்பாளர்களை ஆதரிப்பார்கள்.
சம்மாந்துறை மக்கள் சென்ற தேர்தலில் ஒரு எம்பியை இழந்த வெஞ்சத்தில் இருப்பவர்கள். அக்கரைப்பற்றில் அதாவுல்லாஹ்வின் ஆதிக்கம் இருக்கிறது. நிந்தவூரில் பைசல் காசிம் இருக்கிறார். கல்முனையின் முஸ்லிம் காங்கிறசின் உப தலைவர்க் ஹரீஸ் இருக்கிறார். இம்முறை முஸ்லிம் காங்கிறஸ், மக்கள் காங்கிறஸ், தேசிய காங்கிறஸ் என்ற கட்சிகளின் பிரபலமான வேட்பாளர்களோடு சரி சமனாகப் போட்டி போடக்கூடிய வேட்பாளர்கள் தேசிய மக்கள் சக்தியால் களமிறக்கப்படாவிட்டால் ஜனாதிபதித் தேர்தலில் தேசியமக்கள் சக்திக்கு ஆதரளவித்த மாற்றுக் கட்சி வாக்காளர்கள் மீண்டும் பாரம்பரியக் கட்சியை நோக்கிச் செல்வார்கள்.
வேட்பாளரைப்பார்க்காதீர்கள் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று தேசியமக்கள் சக்தி பிரச்சாரம் செய்யுமாக இருந்தால் அது அம்பாரை முஸ்லிம் அரசியலில் எடுபடாது.
அதிலிருக்கும் மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால் கட்சிக்கு வாக்களித்தால் பெரும்பாலும் தேசிய மக்கள் சக்தியின் சிங்கள் உறுப்பினர்கள் முஸ்லிம் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுவிடுவர். பார்த்தீர்களா உங்கள் வாக்குகளை எடுத்து தேசிய மக்கள் சக்தி சிங்களவர்களை எம்பி யாக்கிவிட்டது என்ற கோஷம் தேசிய மக்கள் சக்தியை மீண்டும் அம்பாரை முஸ்லிம் அரசியலுக்குள் நுளையவே விடாது.
எனவே, இதனை மிகவும் கவனமாக கருத்தில் கொண்டு தேசிய மக்கள் சக்தி தனது அம்பாரை முஸ்லிம் வேட்பாளர் நியமனத்தில் கவனம் செலுத்த வேண்டும்.இல்லாவிடின், இன்று அம்பாரை முஸ்லிம் மக்களுக்குள் எழும்பி இருக்கும் தேசிய மக்கள் சக்திக்கான அலை பாராளுமன்றத் தேர்தலோடு அடங்கும். இனி எழும்பவே எழும்பாது.