மதுபானசாலைகளை நிறுவுவதற்கு அனுமதி அல்லது அனுமதிப்பத்திரம் வழங்குவது சட்டவிரோதமான வியாபாரம் அல்ல என கூறிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், நெறிமுறைக்கு உட்படாத அவ்வாறான மதுபானசாலைகளின் பெயர்ப் பட்டியலை வெளியிடவும் அவற்றின் இயக்கத்தை தடுத்து நிறுத்துவதற்கும் அரசாங்கத்தை எது தடுக்கிறது என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரியவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீப காலங்களில் சட்ட அளவு நிர்ணயங்களைத் தவிர்த்து அதிகளவிலான உரிமங்கள் கலால் திணைக்களத்தால் வழங்கப்பட்டதாக மனோ கணேசன் X இல் ஒரு செய்தியை பதிவிட்டுத் தெரிவித்தார்.
“இது ‘நெறிமுறையற்ற, ஊழல் நடைமுறை’ என்றும் ‘அரசியல் லஞ்சம்’ என்றும் அவர் கூறினார்.
“செப்டெம்பர் 21 தேர்தலுக்கு முன்னர் இது ஒரு பரபரப்பான விடயமாக இருந்தது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்கள் சமீபத்தில் வழங்கப்பட்ட அனைத்து ‘உரிமங்களையும்’ ரத்து செய்வதாகவும் உரிமம் வைத்திருப்பவர்கள் மற்றும் அதற்கு சகாயம் வழங்கி பரிந்துரைத்த அந்தந்த அரசியல்வாதிகளின் பெயர் பட்டியலை வெளியிடுவதாகவும் உறுதியளித்தனர்.
இப்போது பெயர் பட்டியலை வெளியிடுவதிலிருந்தும், இந்த நெறிமுறையற்ற பார்களின் செயல்பாடுகளை நிறுத்துவதிலிருந்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை தடுத்து நிறுத்துவது எது? என மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.