அம்பாறையில் இழுபறி: ரிஷாட் விளக்கம்

0

கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள் மற்றும்  அரசியலமைப்பின்  இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்தவர்கள் உள்ள கூட்டணியில் இணைய போவதில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் மன்னார், மாந்தை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (06)  இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,

“தவறு செய்தமைக்காக கட்சியிலிருந்து விலக்கப்பட்ட சிலர், இன்று தாமாகவே கட்சியிலிருந்து வெளியேறியதாகக் கூறித்திரிகின்றனர். தவறு செய்தவர்கள் உடனடியாக கட்சியிலிருந்து நீக்கப்படுவர். இவ்வாறு தவறு செய்த மூன்று எம்.பிக்களை எமது கட்சி நீக்கியுள்ளது.

இதுபோலவே, கிண்ணியா வைச் சேர்ந்த ஒருவரையும் நாம் நீக்கியுள்ளோம். இன்று அவர் ரணிலுடன் இணைந்துள்ளார். மட்டுமல்ல கட்சியிலிருந்து அவர்தான்,  வெளியேறியதாக ஊடகங்களுக்கு கூறுகிறார். மக்கள் ஆணையை மீறியவர்களுக்கு மக்களே பாடம்புகட்டுவர்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் எமது கட்சி அம்பாறை மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் போட்டியிடும். சில மாவட்டங்களில் தனித்தும் இன்னும் சில மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தும் போட்டியிடும். எம்மால் நீக்கப்பட்டவர்களைச் சேர்த்து உருவாக்கப்படும் கூட்டணியில் நாம் சேர மாட்டோம்.

இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்து, ஜனாஸாக்களை எரிப்பதற்கு உதவியவர்கள் உள்ள கூட்டணியிலும் எமது கட்சி இணையாது. அம்பாறை மாவட்டத்தில், இவ்விடயம் தான் இழுபறியில் உள்ளது. இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் உள்ள அணியில், நாம் இணையப் போவதில்லை.

இவர்களைச் சேர்த்தால் அம்பாறையில் தனித்தே மயில் சின்னத்தில் போட்டியிடுவோம். புத்தளம் மாவட்டத்திலும் இந்த நியதியே பின்பற்றப்படும். இது குறித்து தீர்க்கமான முடிவை எடுக்குமாறு கட்சியின் புத்தளம் மாவட்ட உயர்பீடத்துக்கு அறிவித்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.