ரயில் மோதி மூவர் பலி;விசாரணையில் புதிய தகவல்கள்

0

களுத்துறை, கட்டுகுருந்த பிரதேசத்தில் நேற்று முன்தினம் பதிவான கைக்குழந்தை உட்பட மூவரின் மரணம் தற்கொலையினால் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

21 வயதுடைய இளைஞன் தனது குழந்தையுடன் புகையிரதத்தின் முன் குதிக்க முற்பட்டதாகவும், அவர்களைத் தடுக்க முயன்ற மூன்றாவது நபர் உயிரிழந்துள்ளதாகவும் சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் 21 வயதுடைய இளைஞர், அவரது ஒரு வயது கைக்குழந்தை மற்றும் 49 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இளைஞன் தனது குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தனது குடும்பத்தாரிடம் தெரிவித்ததையடுத்து, தகவல் அறிந்த அயலவர் அவரைப் பின்தொடர்ந்து ரயில் நிலையத்திற்கு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் தந்தையையும் பிள்ளையையும் புகையிரத மேடையில் இருந்து அகற்ற முற்பட்டதாகவும், இதன் போது அவர்கள் அனைவரும் புகையிரதத்தில் அடிபட்டு ரயில் பாதையில் விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு பெரியவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், குழந்தை களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.

குறித்த இளைஞன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளமையும், அவரது மனைவி மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தமையும் பொலிஸ் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞன் தற்கொலை செய்துகொண்டதாக குடும்ப உறுப்பினர்களின் வாக்குமூலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.