கட்சி என்ற ரீதியில் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே ஐக்கிய மக்கள் சக்தியானது தீர்மானங்களை மேற்கொள்வதாக அக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.
அத்துடன், தனிப்பட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானங்களை எடுக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரத்தினபுரியில் வைத்து ஊடகங்களுக்கு நேற்று (13) கருத்து தெரிவிக்கும் போதே ஹேஷா விதானகே இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது, தமிதா அபேரத்ன முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்த ஹேஷா விதானகே, “மாவட்டத்தின் வெற்றிக்காக நான் இதுவரை எடுத்த அனைத்து தீர்மானங்களும் மாவட்ட மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில், மாவட்ட பெரும்பான்மை மக்களுடன் இணைந்தும் எடுக்கப்பட்டவையாகும்.
எனவே எனக்கு இரத்தினபுரி மக்களே அன்றி பெயர்கள் முக்கியமல்ல. இரத்தினபுரி மாவட்ட மக்களை வெற்றிகொள்ளக்கூடிய வல்லுநர்கள், பட்டதாரிகள், அறிஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் கொண்ட பலமான அணி எங்களிடம் உள்ளது.
இது ஒரு ஜனநாயக கட்சி, எங்கள் கட்சி எப்போதும் ஒன்றாக முடிவெடுப்பதன் மூலம் செயல்படுகிறது. அந்த முடிவுகளைக் கையாள்வதில், மக்களின் வெற்றிக்காக தனிப்பட்ட முடிவுகளை எடுக்க வேண்டும் என்றால், நாங்கள் அவற்றை எடுக்கத் தயங்க மாட்டோம்” என்றார்.