ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அரங்கொன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 140க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் 140க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
தாக்குதல் தொடர்பில் இதுவரை 11 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நால்வர் தாக்குதலுடன் நேரடியாக தொடர்புபட்டுள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு பிரிவினரால் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தலைநகரில் உள்ள Crocus City கட்டடத்தில் அமைந்துள்ள அரங்கில் இடம்பெற்ற இசை நிகழ்வின் போது ஆயுதம் ஏந்திய குழுவினர் நுழைந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இராணுவ உடைக்கு ஒத்த உடையை அணிந்திருந்த துப்பாக்கிதாரிகள், Crocus City கட்டடத்தின் நுழைவாயில் ஊடாக உள்நுழைந்த போது அங்கு பிரபல பிக்னிக் இசைக் குழுவின் இசைக்கச்சேரி இடம்பெறவிருந்தது.
பாதுகாப்பு ஊழியரும் அவரது உதவியாளரும் பிரதான நுழைவாயிலில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த போது, ஆயுதம் தாங்கிய குழுவினரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் அரங்கிற்குள் நுழைந்துள்ளனர்.