சுமந்திரனை அவமானப்படுத்தியது ஜே.விபி : அமைச்சர் டக்ளஸ் கண்டனம்

0

ஜே.வி.பியின் மாநாட்டுக்கு அழையா விருந்தாளியாக சுமந்திரன் வந்திருந்தார் எனக் கூறி சுமந்திரனை அவமதித்தது விரும்பத்தகாத செயல் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

யாழப்பாணத்திலுள்ள தனது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் கேட்டதற்கு பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்திருந்த அவர் மேலும் கூறுகையில்,அண்மையில் தென்னிலங்கை தேசிய கட்சியான ஜே.வி.பி தனது மாநாடொன்றை யாழ்ப்பாணத்தில் நடத்தியிருந்தது. இந்த மாநாட்டுக்கு அழைப்பு விடுக்காமல் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் சென்றதாக ஜேவிபியின் பேச்சாளர் எனக் கூறுபவர் ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தமது நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவரை அவமானப்படுத்தும் வகையில் ஏன் அவ்வாறு கூறினார் என்று தெரியவில்லை. இதேநேரம் மாநாடொன்றிற்கு ஏனைய கட்சிகளுக்கு அழைப்பு விடுவது இயல்பான ஒன்றுதான். அதேநேரம் கட்சிக்கான அழைப்பு விடுக்கப்பட்டால் அந்த அழைப்பை ஏற்று அழைக்கப்பட்ட கட்சியின் சார்பில் எவரும் செல்லமுடியும். அந்த வகையில்தான் சுமந்திரனும் சென்றிருப்பார் என நினைக்கின்றேன்.

அந்தவகையில் சுமந்திரனை அவமானப்படுத்தும் வகையிலேயே குறித்த பேச்சாளர் கூறியுள்ளார் என்றே நான் கருதுகின்றேன். அத்துடன் அத்தகைய அவமானப்படுத்தும் செயல் எனக்கு பிடிக்கவில்லை.

இதேவேளை குறித்த கட்சி ஒரு தேசிய கட்சி. இவ்வாறான நிலையில் அண்மையில் குறித்த கட்சியின் முக்கியஸ்தர்கள் இந்தியா சென்றிருந்தனர். இந்தியா சென்ற அவர்கள் தமிழர் பிரச்சினை பற்றி பேசியிருக்க மாட்டார்கள் என்பதோடு அது தொடர்பில் பேசுவதற்கும் விரும்பியும் இருக்காது.

அதேநேரம் மீனவர் பிரச்சினை தொடர்பில் பேசியிருக்கலாம். ஆனால் அவ்விடயம் தொடர்பில் வாய்பொத்தியிருந்துள்ளனர். இதேநேரம் அரசியலுரிமை தொடர்பில் அவர்கள் பேசியிருக்கமாட்டார்கள் என்று எனக்கு நன்கு தெரியும். ஆனால் மீனவர் பிரச்சினை தொடர்பில் அங்கு பேசவில்லை என்பது எனக்கு மனவருத்தமாக உள்ளது என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.