கட்டுநாயக்கவில் ஏற்பட்ட பதற்றமான நிலை

0

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசா வழங்கும் நடவடிக்கையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக நேற்று புதன்கிழமை பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

குடிவரவு – குடியகழ்வு திணைக்களத்தினால் விசா வழங்கும் முறை நேற்று முதல் வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதன் பின்னணியிலேயே இந்த பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக 2012 ஆம் ஆண்டு முதல் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒன்லைன் விசா வசதி குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் மேற்பார்வையிடப்பட்டது.

இதனால், சார்க் நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 30 நாள் விசா கட்டணமாக 20 அமெரிக்க டொலர்களும் மற்ற நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 50 அமெரிக்க டொலர்களும் வசூலிக்கப்பட்டது.

இந்த வருமானம் முழுமையாக இலங்கைக்கே பயன்படுத்தப்பட்டதுடன், மிகக் குறுகிய காலத்திற்குள் சுற்றுலாப் பயணிகளுக்கு ON ARRIVAL VISA வழங்குவதற்கு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் இரு தினங்களுக்கு முன்னர் இம்முறையை அமுல்படுத்துவதை மூன்றாம் தரப்பினருக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

இதன்படி, இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து இதுவரை அறவிடப்படாத சேவைக் கட்டணம் மற்றும் வசதிக் கட்டணமும் இந்த நிறுவனத்தின் ஊடாக விசா வழங்குவதற்கு அறவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

விசா கட்டணத்துடன், சார்க் நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மேலும் 22 அமெரிக்க டொலர்களும், மற்ற நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா கட்டணத்துடன் கூடுதலாக 25 டொலர்களும் அறவிடப்பட்டும் அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் விசா வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தியதால், நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள், பல மணி நேரம் வரிசையில் காத்திருந்தமையே பதற்றத்துக்கு காரணமாக அமைந்தது.

விசா வழங்கும் இந்த நிறுவனம் இந்தியாவுக்கு சொந்தமானதெனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இவ்வாறு வெளியாகியுள்ள தகவல்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் நிராகரித்துள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் (BIA) விசா வழங்கும் நடைமுறையை இந்திய நிறுவனங்கள் பொறுப்பேற்கின்றமை தொடர்பாக சமூக ஊடகங்கள் உட்பட பல்வேறு ஊடகங்களில் வெளியாகியுள்ள அறிக்கைகள் மற்றும் கருத்துகள் தொடர்பாக நாம் அறிந்துள்ளோம்.

இந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிறுவனங்கள் இந்தியாவை தளமாகக்கொண்டு இயங்கும் நிறுவனங்களோ அல்லது இந்திய நிறுவனங்களோ அல்ல, மாறாக வேறு இடங்களை தலைமையகமாகக் கொண்டவை ஆகும். இவ்வாறான சூழலில் இந்தியாவை தொடர்பு படுத்துவது அடிப்படை ஆதாரமற்றதாகும் என உயர்ஸ்தானிகராலயம் நிராகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.