அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ள மகிந்த!

0

அரசாங்கத்திற்குச் சொந்தமான சில சொத்துக்கள் மற்றும் வர்த்தகங்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகளால், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் செலவீனங்களைக் குறைத்தல் மற்றும் அது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்வதன் அடிப்படையில் அமைந்துள்ளது எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கம், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எஞ்சிய காலப்பகுதியில் நாட்டை ஆளுவதற்காக ஏற்படுத்தப்பட்ட இடைக்கால வேலைத்திட்டமாகும் என மஹிந்த ராஜபக்ஷ நினைவுறுத்துகின்றார்.

இவ்வாறான நிலையில் அரச சொத்துக்களை அவசர அவசரமாக விற்பதன் மூலம் நாட்டுக்கு சிறந்த பலன் கிடைக்காது என்பதை தனியார்மயத்திற்கு ஆதரவான தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரை அரசாங்கத்திற்குச் சொந்தமான சொத்துக்கள் அல்லது வர்த்தகங்களை விற்பனை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.