சென்னையிலிருந்து இஸ்ரேலுக்கு வெடிபொருள்களைக் கொண்டு சென்ற கப்பலை நிறுத்திக்கொள்ள ஸ்பெயின் அனுமதி மறுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டென்மார்க் கொடியுடன் சென்றுகொண்டிருக்கும் சரக்குக் கப்பலான டனிகா கப்பலானது ஹைஃபா துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
பிரஸ்ஸல்ஸ் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்பெயின் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோஸ் மானுவெல், இதுதான் முதல்முறை, நாங்கள் இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்திருப்பது, காரணம், இதுதான் முதல் முறை,
ஒரு கப்பல், வெடிபொருள்களை ஏற்றிக்கொண்டு இரேலுக்குச் சென்றுகொண்டிருக்கும்போது, ஸ்பெயின் துறைமுகத்தில் நிறுத்திக்கொள்ள அனுமதி கேட்பது என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, காஸாவில் போரை நிறுத்தவே இந்தியா முயன்றுவருவதாக, அண்மையில் தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார்.
ஆனால், அதற்கு நேர்மாறாக, இந்தியாவிலிருந்து வெடிபொருள்கள் இஸ்ரேலுக்குச் சென்றுகொண்டிருப்பது, தற்போது கப்பலுக்கான அனுமதி மறுக்கப்பட்டிருப்பதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமரிசித்துள்ளன.
இது குறித்து திரிணமூல் எம்.பி. சாகேத் கோகலே கூறியிருப்பதாவது, காஸா மீது வெடிகுண்டு மழைப் பொழிய இஸ்ரேலுக்கு வெடிபொருள்களுடன் சென்ற இந்திய சரக்குக் கப்பலுக்கு அனுமதி மறுக்கப்பட்ட செய்தி வெளியாகியிருக்கிறது.
ஆனால், மோடி, காஸாவில் போரை நிறுத்த முயற்சிப்பதாக உலகத்தை பொய் சொல்லி நம்பவைக்கிறார்.
இதன் மூலம், மோடியின் பொய் மீண்டும் ஒரு முறை வெளிப்பட்டுள்ளது.பிரதமர் மோடியின் நேர்மை பூஜ்ஜியத்தில் உள்ளது.
காஸாவில் போரை நிறுத்த முயற்சிப்பதாக அவர் பொய்யான, முட்டாள்தனமான பொய்யை கூறியிருப்புதை உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது.
ஆனால், இப்போது, பாலஸ்தீன மக்கள் மீது வெடிகுண்டுகளை வீச இஸ்ரேலுக்கு மோடி தலைமையிலான மத்திய அரசு வெடிகுண்டுகளை அனுப்பியிருக்கிறது.
தேர்தல் முடிவுகளால் பிரதமர் மோடி விரக்தியில் உள்ளார். கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் அவர் சொல்லும் பொய்கள் உலகம் முழுக்க வெளிப்பட்டுவிடுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இஸ்ரேலுக்கு வெடிபொருள் மற்றும் ஆயுதங்களை எடுத்துச் செல்லும் எந்தவொரு கப்பலாக இருந்தாலும், ஸ்பெயின் துறைமுகம் வர அனுமதிகோரினால், இதுதான் எங்களது நிரந்தரக் கொள்கை. வெளிப்படையான காரணத்துக்காகவே, வெளியுறவு அமைச்சகம், இதுபோன்றதொரு கோரிக்கையை உடனடியாக மறுத்துவிட்டது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு இன்னும் கூடுதலாக ஆயுதங்கள் வேண்டாம், அங்கு மேலும் அமைதிதான் தேவை என்று பதிலளித்துள்ளார்
ஜோஸ் மானுவெல்.கப்பலின் விவரங்களை வெளியிட வெளியுறவுத் துறை அமைச்சர் மறுத்துவிட்டார்,
இதற்கிடையே ஸ்பெயின் போக்குவரத்துத் துறை அமைச்சர் இது பற்றி கூறுகையில், இது டனிகா கப்பல், தென்கிழக்கு துறைமுகமான கார்டாஜெனாவில் மே 21ஆம் தேதி நிறுத்திக்கொள்ள அனுமதி கோரியிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் காஸா தாக்குதலுக்கு எதிராகக் குரல்கொடுக்கும் நாடுகளில் முன்னணியில் ஸ்பெயின் இருப்பதோடு, பாலஸ்தீன அரசுக்கு குரல் கொடுக்கும் ஐரோப்பிய நாடகளையும் ஒன்றுதிரட்டி வருகிறது என்பது குறிப்பிடதத்க்கது.