தாய்வான் எல்லையில் போர் பதற்றத்தை ஏற்படுத்தும் சீன விமானங்கள்: ஜனாதிபதி லாய் சிங் – தே கடும் கண்டனம்
தாய்வானின் எல்லைக்குள் பறந்த சீன போர் விமானங்களால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த தாய்வான் கடந்த 1949ஆம் ஆண்டில் தனி நாடாகப் பிரிந்தது. ஆனால், தற்போதும் தாய்வான் தமது ஒருங்கிணைந்த பகுதி என்று சீனா கூறி வருவதோடு, அதனை மீண்டும் தம்மோடு இணைத்துக்கொள்ள சீனா தீவிரம் காட்டி வருகிறது.
இதனால் தாய்வானுடன் எந்தவொரு வணிக அல்லது தூதரக உறவும் வைத்துக்கொள்ளக் கூடாது என சீனா ஏனைய நாடுகளை எச்சரித்துள்ளது.
இந்த எச்சரிக்கையை காதில் வாங்காத அமெரிக்கா, தமது பிரதிநிதிகளை தாய்வானுக்கு அனுப்பியது.
இது சீனாவுக்கு கோபத்தை ஏற்படுத்த, அவ்வப்போது தாய்வான் எல்லையில் போர்ப்பயிற்சி நடத்தி பதற்றத்தை ஏற்படுத்துகிறது.
தங்கள் மீது தாக்குதல் நடத்தினால் பதில் தாக்குதல் நடத்த நாங்கள் தயார் என தாய்வானும் கூறியுள்ளது.
இந்நிலையில் கடந்த மே மாதம் தாய்வானில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதில் சீனாவின் ஆதரவாளர் ஹவ் யொ-ஹி மற்றும் ஆளுங்கட்சி தரப்பில் லாய் சிங் -தே ஆகியோர் போட்டியிட்டதில், ஆளுங்கட்சியில் லாய் சிங்-தே வெற்றி பெற்று மீண்டும் ஜனாதிபதியானார்.
இதனால் தாய்வான் எல்லைக்குள் சீனா போர்ப்பதற்றத்தை அதிகரித்துள்ளது. கடந்த ஒரு நாளில் மட்டும் 7 போர்க்கப்பல்கள், 23 போர் விமானங்கள் தாய்வான் எல்லையில் போர்ப்பயிற்சிகள் மேற்கொண்டுள்ளன.
இதில் 19 விமானங்கள் எல்லையைத் தாண்டி தாய்வானுக்குள் பறந்து சென்றதாக கூறப்படுகிறது.
சீனாவின் இந்த செயலுக்கு தாய்வான் ஜனாதிபதி லாய் சிங் – தே கடும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.