சிங்கள பௌத்த அரச மேலாதிக்கவாதம் தமிழரின் குடியுரிமைமீறல், மொழியுரிமைமீறல், நிலவுரிமைமீறல் மற்றும் அவர்கள் மீதான பொலிஸ் – இராணுவ ஆதிக்கமென வளர்ந்து நாசிசம் எனப்படும் இனப்படுகொலை இராட்சத தேசியவாதமாக (Monster Nationalism) பெருவளர்ச்சி அடைந்து கட்டமைக்கப்பட்ட இனவழிப்புவாதமாக (Structural Genocide) இன்று முழு அளவிலான பரிமாணத்தைப் பெற்றுள்ளது.
இனப்படுகொலையும், அதனடிப்படையிலான ஜனநாயக மீறலுமே இலங்கை அரசியலின் அச்சாணியாகவும், நடுநாயகமாகவும் அமைந்துள்ளன.
முள்ளிவாய்க்கால் என்ற இடப் பெயர் 2009 ஆம் ஆண்டில் இருந்து, அரசியல் வரலாற்று அர்த்தத்தில் இனப்படுகொலை என்ற பொருட் பெயராய் மாறிவிட்டது. இலங்கைத்தீவின் ஜனநாயகம் என்பது பொய்யான வரலாற்றின் அடிப்படையிலான சிங்கள இனநாயகத்தால் கருத்தமைப்பும், கட்டமைப்பும் செய்யப்பட்டு அதுவே நடைமுறையாயும் விளங்குகிறது.
தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை என்பது ஜனநாயகம் என்ற பெயரில் சிங்கள இனநாயகத்தால் கட்டமைப்புச் செய்யப்படுகிறது. இது ஜனநாயக மீறலாகவும் முழு இலங்கைத் தீவிற்குமுரிய அரசியலையும் ஜனநாயகவிரோத அரசியலாகவும் வடிவமைக்கிறது. இன்று இனப்படுகொலையானது வெற்றிவாதத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றிவாதம் இலங்கை முழுவதையுமே இராணுவ மயப்படுத்துகிறது. கூடவே தமிழின எதிர்ப்பு வெற்றிவாதத்தைக் கொண்ட சிங்கள பௌத்த அரச இராணுவவாதம் தமிழ் மக்களை ஈவிரக்கமின்றிக் ஒடுக்கும் மனப்பாங்கையும், நடைமுறையையும் கொண்டுள்ளது.
ஆதலால் இனப்படுகொலைக் கலாச்சாரத்திலிருந்து இராணுவ வெற்றிவாதம், சிங்கள இனநாயகம், மகாசங்க ஆசீர்வாதத்துடனான சிங்கள பௌத்த மக்கள் ஆணை என்பன இணைந்து வேரும் விழுதும்விட்டு பெரு விருட்சமாய் எழுந்து நிற்கின்றது. மகாசங்கம், இராணுவம், ஆட்சியாளர் (அரசாங்கம்), பொலிஸ் மற்றும் நீதித்துறை, நிர்வாகக் கட்டமைப்பு, ராஜதந்திர நிர்வாகக் கட்டமைப்பு என்பன அனைத்தும் தனித்தனியேயும், இணைந்தும் இன அழிப்புக் கலாச்சாரத்தையும், நடைமுறையையும் கொண்ட செயல்ப்பூர்வ அரசாட்சி அங்கங்களாகும்.
அரசியல் யாப்பு, சட்டம், நியாயம், பொதுமனம் என்பன எல்லாம் இவற்றிற்கு கீழ்ப்பட்டவையே ஆகும். இனப்படுகொலையினால் இராணுவம் அடைந்த வெற்றி என்பது தொடர்ந்து தமிழ் மக்களை அழிப்பதற்கான ஒரு மடைதிறப்பாகும். அது அரசியல், இராணுவம், நிர்வாகம், புலனாய்வு, அபிவிருத்தி, குடியேற்றம், சிங்கள மொழியாதிக்கம், சிங்கள பௌத்த மயமாக்கம் என்ற அனைத்து அங்கங்களிற் கூடாகவும் தங்கு தடையின்றி தமிழின அழிப்பை முன்னெடுக்க வழியமைத்துள்ளது.
எனவே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையானது தமிழின அழிப்பை முழுஅளவில் நிறைவேற்றி முடிப்பதற்கான ஒர் அனுமதிப்பத்திரமாகவே அமைந்துள்ளது. இலங்கை ஒற்றையாட்சி அரசியல் அமைப்பிற்குள் பத்தில் ஒன்றிற்கும் குறைவான அளவில் தமிழ் மக்கள் பின்னிணைக்கப்பட்டிருப்பதால் எப்போதும் இப்பேராபத்தை எதிர்கொண்டபடியே தமிழ் மக்களின் தலைவிதி சிதைகிறது.
இத்தகைய அரசியல் வரலாற்று மெய்மையையும், நிகழ்கால யதார்த்தத்தையும் கருத்தில் கொண்டே முள்ளிவாய்க்காலிற்குப் பின்னரான தமிழ் அரசியல் நெறிப்படுத்தப் பட்டிருக்க. வேண்டும்.
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை உள்நாட்டுரீதியில் நாடாளுமன்ற விவாதங்களின் மூலமாகவோ, நீதிமன்ற வழக்காடல்களின் மூலமாகவோ, சிங்களத் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகளின் மூலமாகவோ, மற்றும் நல்லிணக்க ஒத்துழைப்புக்கள் மூலமாகவோ, தீர்வுகாண முடியாது என்பதை சுதந்திரத்திற்குப் பின்னரான காலத்தில் இருந்து இற்றை வரையான இலங்கையின் நீண்ட அரசியல் வரலாறு நிரூபித்து நிற்கின்றது.
உள்நாட்டில் கொழும்பை விட்டகன்று இலங்கையின் எல்லையைவிட்டுக் கடல்தாண்டி திம்பு, தாய்லாந்து, ரோக்கியோ, ஒஸ்லோ என நாடுகள் கடந்து, பிராந்தியம் கடந்து, கண்டம் கடந்து, இந்திய இலங்கை ஒப்பந்தம் முதல் சர்வதேச ஒப்பந்தங்களாக நீண்டு இன்று முழு அளவிலான சர்வதேசப் பரிமாணம் பெற்றுவிட்ட தமிழ்த் தேசிய இனப்பிரச்சனையை மீண்டும் கொழும்பிற்குள்ளோ, இலங்கை பாரளுமன்றம் என்ற சிறைக்குள்ளோ அடைத்து, அடக்கி, சுருக்கித் தீர்வுகண்டிட முடியாது பொன்னன் முதல் சம்மந்தன் வரை தோல்வியடைந்துள்ள நாடாளுமன்ற விவாத அரசியலினாலோ, சிங்கள அரசுடனும், சிங்கள அரசாங்கங்களுடனும் 1949ல் இருந்து இன்று வரை ஒட்டி உறவாடிய இணக்க அரசியலினாலோ, விட்டுக் கொடுப்புக்களினாலோ, சமரசங்களினாலோ, ஓடுகாலி அரசியல்களினாலோ தமிழர் இனவழிப்புக்குள்ளானதைத் தடுத்து நிறுத்திட முடியவில்லை.
இணக்க அரசியல் காலகட்டங்கள்
1) 1949 ஆம் ஆண்டிலிருந்து 1956 ஆம் ஆண்டுவரை முறையே பிரதமர்கள் டி.எஸ். சேனநாயக்க, டட்லி சேனநாயக்க, சேர்.ஜோன் கொத்தலாவல ஆகியோரின் கீழ் ஜி.ஜி.பொன்னம்பலம் அமைச்சராக இருந்து இணக்க அரசியல் நடாத்திய எட்டாண்டு காலமும் முதலாவது இணக்க அரசியல் காலகட்டமாக அமைந்தது.இக்கால கட்டத்திற் கண்ட பலன் சிங்களக் குடியேற்றங்களால் கிழக்கு நிரப்பப்பட்டு கிழக்குத் துரிதமாக சிங்கள மயமாக்கலுக்கு உள்ளானது.
மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதிலிருந்து அவர்கள் உத்தியோகபூரவ ஆவணங்களற்ற நிலையில் சாதாரண நிர்வாகச் செயற்பாடுகளுக்கும் கதியற்று பெரும் வேதனைகளுக்கும் வலிகளுக்கும் உள்ளானதுடன் அவர்களை இந்தியாவிற்கு நாடுகடத்துவதற்கான நிர்வாக நடவடிக்கைகளையும் அரச இயந்திரம் வெற்றிகரமாய் மேற்கொண்டு வந்தது.
2) பிரதமர் டட்லி சேனநாயக்கவின் கீழ் தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சி அமைச்சர் பதவியேற்றும் (மு.திருச்செல்வம்), ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் உபசபாநாயகர் பதவி பெற்றும் (மு.சிவசிதம்பரம்) 1965 – 1970 வரை தேசிய அரசாங்கம் அமைத்து இணக்க அரசியல் நடாத்தினர். இதனால் கண்ட பலன் டட்லி – செல்வா ஒப்பந்தம் கைவிடப் பட்டமையும், பசுமைப் புரட்சி (Green Revolution) என்ற பெயரில் தமிழ் மண்ணில் சிங்களக் குடியேற்றங்கள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டமையுமே ஆகும்.
3) பேராசிரியர் ஏ.ஜே.வில்சன், நீலன் திருச்செல்வம் என்போரின் அனுசரணையுடன் அ.அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம் என்போர் தலைமையில் 1979 – 1983 கறுப்பு ஜூலை வரை இணக்க அரசியல். இதனால் கண்ட பலன் மாயமானான மாவட்ட அபிவிருத்தி சபை எரிந்து சாம்பலானது. கூடவே யாழ் பொது நூலகம் எரித்து சாம்பலாக்கப்பட்டது, 1979 ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டு தமிழ் மண்ணில் இற்றை வரையான இராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது.
அத்துடன் கறுப்பு ஜூலையோடு இணக்க அரசியல் என்னும் தமிழ்த்தலைவர்களின் இத்தேனிலவு முடிவுக்கு வந்தது.
4) 2015 – 2020 வரை ரணில் – சிறிசேன அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணக்க அரசியல் அரங்கேறியது. இதன் பலாபலன், அனைத்தும் இலவுகாத்த கிளியாயும், எதிர்மறையாயும் போனமை அனைவருமறிந்ததே. முக்கியமாக இனப்படுகொலையை களத்தில் நிறைவேற்றிய இராணுவத் தலைமைத் தளபதிக்கு பீல்ட் மாஷல் எனும் அதியுயர் இராணுவ விருது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் வளங்கப்பட்டது.
மேற்படி அனைத்து வகை இணக்க அரசியல்களும் ஏமாற்றுக்களாயும், தமிழின அழிப்பிற்கான ஏதுக்களாகப் பயன்படுத்தப்பட்ட நிலையில் எதிரிக்கு எதிரான இடையறாத நேரடிப் போராட்டமே ஒரே வழி. “நெருக்கடி கொடுக்காமல் ஆட்சியாளர்களிடமிருந்நது உரிமைகளைப் பெறமுடியாது” உள்ளும் புறமும் மேற்கொள்ளக்கூடிய நேரடிப் போராட்ட வழிமுறைகளினாலும், சர்வதேச மட்டத்திலான சரியான ராஜதந்திர வழிமுறைகளை மேற்கொள்வதன் மூலமுமே தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வு முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.
பொது வேட்பாளர்
கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்த் தலைமைகள் எனப்படுவோர் தமது இயலாமையையும், ஓடுகாலி அரசியலையும், தோல்வியையும் தெளிவாக நிரூபித்து எதிரிக்கு துணைபோவதில் முடிந்தது. சிங்கள ஆட்சியாளர்கள், அவர்களை அண்டிப் பிழைக்கும் சார்புக் கட்சிகள், தமது தனிப்பட்ட சுயநலத்திற்காக எதிரிக்கு துணைபோகும் தமிழ்த் தேசியம் பேசும் கட்சியினர் அனைவரும் எதிரணியைச் சேர்ந்தவர்களே.
ஆகவே மாற்று அரசியல் பேசும் சக்திகள் முதலில் கூட்டாக ஒன்று திரளவேண்டும். இவர்கள் அனைவரும் ஆகக்குறைந்தபட்ச உடன்பாட்டின் கீழ் கூடியபட்ச ஐக்கியமாக எதிரிக் கெதிரான பெரும் சக்தியாக மிளிரவேண்டும். எதிரியையும், எதிரியின் கூட்டாளிகளையும் எதிர்க்க வேண்டும் என்றால் மாற்று அரசியல் பேசும் சக்திகள் அனைவரும் முதலில் ஒன்று சேர்ந்து ஒரு பலமான ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டும்.
அந்த முடிவினை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழர் தாயகத்தில் செயல்படுகின்ற பல வகைப்பட்ட 96 சிவில் சமூக அமைப்புகளை ஒருங்கிணைத்து 100க்கு மேற்பட்ட உறுப்பினர்பளைக் கொண்ட “தமிழ் மக்கள் பொதுச் சபை” (Tamil people’s general assembly) என்ற சிவில் சமூக அமைப்பு உருவாக்கப்பட்டது.